2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுநீரக மாற்று மோசடி விவகாரம்: எழுவரும் சிறைக்கு மாற்றம்

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.பாருக் தாஜூதீன்

சிறுநீரகங்களைச் சட்டவிரோதமான முறையில் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகள் எழுவரையும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ், நேற்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுவருமே இவ்வாறு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவின் சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரி டபிள்யூ.எச். சந்திரதிலக்க விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் எழுவரையும், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதற்குப் போதியளவான பாதுகாப்பு அங்கில்லை என்றும், கொழும்பு சிறைச்சாலைக்கு அவர்களை மாற்றி, அங்கிருந்து வழக்குகளுக்கு ஆஜர்படுத்துமாறும் மேலதிக நீதிவான் கட்டளையிட்டார்.

இதேவேளை,  சிறுநீரகங்களைச் சட்டவிரோதமான முறையில் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளில் பிரதான சந்தேகநபரான விஜிதாஜினி சுரேஸ் லக்ஷ்மன் குமார் தப்பியோடிவிட்டார் என்று கொழும்பு குற்றப்பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் திங்கட்கிழமையன்று (18) கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வழக்கு மே மாதம் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X