2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சிவப்பு விளக்குகள் ஒளிர மறுத்தன: மௌனித்தது சபை

Kanagaraj   / 2016 ஜூன் 09 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சபைக்குள் உள்ள சகல ஒலிவாங்கிகளும் ஏககாலத்தில் செயலிழந்து, சபையைக் கொண்டு நடத்திச்செல்வதில் பாரிய சிரமங்களை ஏற்படுத்தியமையால், சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று வியாழக்கிழமை காலை 9.30 வரைக்கும் ஒத்திவைத்தார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்த நிலையிலேயே, சகல
ஒலிவாங்கிகளும் செயலிழந்து விட்டன.

செயலிழந்த ஒலிவாங்கிகளைச் சீர்செய்வதற்கான பிரயத்தனங்கள், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 1:30 மணிமுதல் 2:35 மணிவரையிலும் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அம்முயற்சிகள் கைகூடவில்லை.

நேற்றைய சபையமர்வு, 30 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றது. அதனை கொண்டுநடத்துவத்தில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டமையால், சபை நடவடிக்கைகள் யாவும், இன்றுகாலை 9:30 மணிவரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குக் கூடியது.
நாடாளுமன்ற கூடப்பட்ட வேளையிலேயே வழமையை விடவும் இரு பக்கங்களும் உறுப்பினர்களால் ஓரளவுக்கு நிரம்பி வழிந்திருந்தன.

சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரிடம் கேள்விகளை கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மூன்று கேள்விகளும் கேட்கப்பட்டன.

அதன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. ஒழுங்குப்பத்திரத்தின் பிரகாரம் ஏழு கேள்விகள் கேடகப்பட்டிருந்தன. முதலாவது கேள்வியைக் கேட்டிருந்த புத்திக பத்திரண எம்.பி, அவைக்கு நேற்று சமுகமளித்திருக்கவில்லை. அதனால், இரண்டாவது கேள்விக்கு நகர்த்தப்பட்டது.

இரண்டாவது கேள்வியைக் கேட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார், அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரிடம் திருகோணமலை பிரதேசத்தில் மீனவர் சங்கமொன்றின் சார்பாக லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியினால் பெண் அரசியல்வாதியொருவருக்கு 750 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் எழுந்து நிற்கையில் ஒலிவாங்கிகள் முழுமையாக ஒரே நேரத்தில் செயலிழந்துவிட்டன.

ஒலிவாங்கிகளை முடுக்கிவிடுவதற்கு பல்வேறான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஒலி வாங்கிகள் இயங்க மறுத்துவிட்டன. பிரதமரும் அவ்வப்போது அமுக்கி, அமுக்கி முயற்சித்துப் பார்த்தார் அவருடைய ஒலிவாங்கியும் இயங்கமறுத்துவிட்டது.

எனினும், சகல ஒலிவாங்கிகளின் மின்மினிப் பூச்சிகளைப்போல அவ்வப்போது ஒளிர்ந்து அணைந்தன. நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு முடங்கிய ஒலிவாங்கிகள் 10 நிமிடங்கள் கடந்து 1.40 மணிவரையிலும் இயங்கவே இல்லை. நாடாளுமன்ற ஊழியர்களும் ஓடோடி முயன்றனர் முடியவே இல்லை. அதனையடுத்தே சபாநாயகர் கரு ஜயசூரிய, சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட போது, அவையிலிருந்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'இது மஹிந்தவின் சதி என்பீர்களே? சூழ்ச்சி என்பீர்களே? வெட்கம் வெட்கம், நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு அஞ்சி, இவ்வாறான தில்லுமுல்லு வேலையைப் பார்த்துவிட்டீர்களே' என்று ஆளும் தரப்பினரைப் பார்த்துக் கிண்டல் செய்தனர்.

பதிலுக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், எங்களுக்கு மூன்றிலிரண்டு இருக்கிறது என்று கூறிக்கொண்டு, கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்தனர்.

இதற்கிடையில் சபைக்குள் பெரிய, ப‡பல்கள் (Buffel Set) இரண்டு கொண்டுவரப்பட்டன. அவையிலிருந்த அனைவரும் ஒருகணம் திகைத்துவிட்டனர். ஆளும் தரப்பினரை பார்த்த எதிரணி உறுப்பினர்கள் இது என்ன நாடகக் கொட்டகையா? இசைக்கச்சேரியா நடத்தபோகின்றீர்கள்' என்று கேலிசெய்தனர்.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட இரண்டு ப‡பல்களும், சபாநாயகரின் அக்கிரசாசனத்துக்கு இருபக்கங்களிலும் வைக்கப்பட்டன. இரண்டொரு மைக்குகளும் கொண்டுவரப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.

எனினும், அந்த முயற்சிளுக்கு, பொது எதிரணியினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். 'இது என்ன கச்சேரிக் கூடமா? நாங்கள் உரையாற்றுவது பதிவே செய்யப்படாது' என்றெல்லாம் கூறினர். அதனையடுத்து அவ்விரண்டு ப‡பல்களும் கொண்டுவந்த வழியிலேயே கொண்டுசெல்லப்பட்டன.

நேற்றைய சபையமர்வு, நேற்றுப் பிற்பகல் 1:30 மணிமுதல் மாலை 6:30 மணிவரையும் நடத்தப்படவிருந்த நிலையிலேயே இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டன. ஒலிவாங்கிகள் செயலிழந்தமை, தற்செயலா அல்லது சதியா என்பது தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், ஒலிவாங்கிகள் செயலிழந்தால் இரண்டொரு நிமிடங்களில் சரிசெய்துவிடப்படும். எனினும், நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவிருந்த நேற்றைய தினம், முழுமையாகச் செயலிழந்தமை, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொது எதிரணியினர் தெரிவித்தனர்.

சபையைப் பொறுத்தவரையில், அவைக்குள் இருக்கின்ற ஒலிவாங்கிகளின் உச்சியில் ஒருவகையான குமிழ் இருக்கின்றது. ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தால், அந்த ஒலிவாங்கி, சிவப்பு நிறத்தில் ஒளிரும், அவ்வாறு ஒளிரவேண்டிய சிவப்பு நிற விளக்குகள் அணைந்தமையால், பிற்பகல் 2:35க்கே சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதேநேரம், நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில், இன்றைய (09) தின அலுவல்கள் எதுவாக இருந்தாலும் நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளதாக அறியமு-டிகின்றது.  

'செயலிழந்துள்ள ஒலிவாங்கித் தொகுதி, நேற்று மாலை 6.35க்கு சீர் செய்யப்பட்டுவிட்டது. நாளை (இன்று) காலை 9.30க்கு அமர்வுகள் ஆரம்பமாகும்' என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார். ஒலிவாங்கித் தொகுதியை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஒலிவாங்கித் தொகுதி, இன்று வியாழக்கிழமை வழமைக்குத் திரும்பமுடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாத்க தகவல்கள் கசிந்திருந்த நிலையிலேயே அவர், மேற்கண்டவாறு அறிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .