S.Renuka / 2026 மார்ச் 16 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிகளில் வாகனங்களை நிறுத்திச் சோதனையிடுதல் மற்றும் ஆவணங்களைக் கோருதல் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான அதிகாரங்கள் குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 162ஆம் பிரிவின் கீழ், வீதியில் செல்லும் வாகனங்களை நிறுத்துவதற்கான முதன்மை அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடமையில் இருக்கும் மற்றும் சீருடை அணிந்திருக்கும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கும் வாய்மொழி உத்தரவுகள் அல்லது கை சமிக்ஞைகளுக்கு அனைத்து ஓட்டுநர்களும் கீழ்ப்படிய வேண்டும் என்பது கட்டாயமாகும்.
* வாகனத்தை நிறுத்துதல்.
* பின்னோக்கிச் செலுத்துதல் (Reverse).
* வேகத்தைக் குறைத்தல்.
* போக்குவரத்து ஒழுங்கிற்காக வீதியின் ஒரு பக்கத்திற்கு ஒதுங்குதல். போன்ற அனைத்து கட்டளைகளும் இதில் அடங்கும்.
போக்குவரத்துப் பொலிஸார் மாத்திரமே நிறுத்த முடியுமா?
பொதுமக்களிடையே நிலவும் ஒரு தவறான கருத்தை பொலிஸ் திணைக்களம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது. "போக்குவரத்துப் பிரிவு" (Traffic Division) என்பது ஒரு நிர்வாக ரீதியான பிரிவே தவிர, சீருடை அணிந்த எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் வாகனங்களை நிறுத்திச் சோதனையிடும் அதிகாரம் உண்டு.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி, குற்றங்களைத் தடுத்தல் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிதல் என்பது அனைத்து அதிகாரிகளினதும் கடமையாகும். எனவே, விதிமீறல் நடந்ததாகச் சந்தேகிக்கும் பட்சத்தில், எந்தவொரு சீருடை அணிந்த அதிகாரியும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை அல்லது காப்புறுதி ஆவணங்களைக் கோர முடியும்.
தனி ஒரு அதிகாரி நடவடிக்கை எடுக்கலாமா?
சட்டத்தின்படி, ஒரு தனி அதிகாரி வாகனத்தை நிறுத்திச் சோதனையிடுவதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் முழுமையான அதிகாரம் உண்டு. வாகனச் சோதனையின் போது சாட்சியாக இரண்டாவது அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் இல்லை. எனினும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிக்காகவே அதிகாரிகள் ஜோடியாகப் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
பொலிஸ் உத்தியோகத்தரின் சமிக்ஞையை மீறிச் செல்வது அல்லது கடமைக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாரிய அபராதங்கள் அல்லது நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago