2024 மே 08, புதன்கிழமை

சனியன்று வருகிறது அடுத்த தொகுதி

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளின் அடுத்த தொகுதி, எதிர்வரும் சனிக்கிழமை (07ஆம் திகதி), நாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கிரா சுகியாமா தெரிவித்தார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் தனிப்பட்ட முறையில் முன்வைத்த கோரிக்கையின் பேரிலேயே அடுத்த தொகுதி கொண்டுவரப்படவுள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) பிற்பகல் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட  அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை,  இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம்,  உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் போதே, ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்தார். 

நாட்டு மக்களுக்கான அஸ்ட்ரா செனெக்கா இரண்டாவது அலகு தடுப்பூசித் தேவைப்பாடுகளுக்காக, ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்து, ஜப்பான் பிரதமரின் தலையீட்டின் பேரில், இந்த 1.456 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டதாக, தூதுவர் அக்கிரா சுகியாமா தெரிவித்தார். 

இதன் முதல் தொகுதியான 728,460 தடுப்பூசிகள், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL- 455 விமானத்தின் மூலம், கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. நேற்று (01) முதல் மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மத்திய நிலையங்களில், இந்தத் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற சில மணித்தியாலங்களுக்குள், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுதல் மற்றும் இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள், அதற்கு ஜனாதிபதி  வழங்கிவரும் தலைமைத்துவம் தொடர்பில், ஜப்பான் தூதுவர், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் நிறுவனங்களின் இலங்கைப் பிரதிநிதிகள், பெரிதும் பாராட்டியுள்ளனர். 

கடந்த மே மாதமளவில், தனிப்பட்ட முறையில் ஜப்பான் தூவரிடம் தான் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமாகப் பதிலளித்து, அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை அன்பளிப்புச் செய்தமை குறித்து, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் விசேட நன்றியை, ஜப்பான் பிரதமருக்கும் ஜப்பான் அரசாங்கத்துக்கும், ஜப்பான் தூதுவருக்கும், ஜனாதிபதி தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X