2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாராவை இனங்காண சடலங்கள் தோண்டியெடுப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 27 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான் 

கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் சடலத்தை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிவதற்கு, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், அம்பாறை புத்தங்கல பொது மயானத்திலிருந்து, இன்று (27) தோண்டி எடுக்கப்பட்டன.

மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில்  சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யூ.யூ.தினுகா மதுசானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க, தடயவியல் பொலிஸ் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னத்துடன் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஈஸ்டர் தொடர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான சஹரான் ஹசீமின் சகோதரரால் 26.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பகுதியில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த பகுதி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்த சஹ்ரான் ஹசீமின் தம்பி உட்பட பலரும் உயிரிழந்ததுடன், சஹ்ரான் ஹசீமின் மனைவி உட்பட அவரது மகள் உயிருடன் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

ஈஸ்டர் தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சாரா ஜஸ்மின் இறந்ததாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில்  அவர் தொடர்பான  விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சாராவை அடையாளம் காண  உடற்பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
  
இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  சாரா என்றழைக்கப்படும்  புலஸ்தினி மகேந்திரன்  என்ற பெண்ணின் டிஎன்ஏ மாத்திரம் எந்தவொரு டிஎன்ஏயுடனும் ஒத்துப்போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .