2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் COVID-19 பரவலைத் தடுக்கும் பொருட்டு சிறைக்கைதிகளை விடுவித்தல் எனும் தலைப்பிடப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதம நீதியரசரும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

'அடையாளம்' உள்ளிட்ட அமைபுகளும் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்டோரும் இந்தக் கடிதத்தை, இன்று (25) அனுப்பியுள்ளனர். 

அந்தக் கடிதத்தில்,

“சிறைச்சாலைகளில் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கு இன்றியைமையாததாக, சிறைக் கைதிகளை விடுதலை செய்வதைப் பற்றியும் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பது பற்றியும் கலந்துரையாடுவதற்குக் குழு ஒன்றினை நியமிப்பது பற்றிய அறிவித்தலை நாம் வரவேற்கின்றோம்.

“போதிய தனிநபர் துப்பரவு வசதிகளும் சுகாதார வசதிகளும் இன்றி அளவுக்கதிகமான கைதிகளுடன் சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாகக் காணப்படுகின்ற காரணத்தால், கொவிட்-19ஆல் தொற்றுக்குள்ளாகும் அதிக சாத்தியப்பாட்டை, கைதிகள் கொண்டுள்ளனர்.

“இவ்வாறான நெரிசல்மிக்க சிறைச்சாலைகளில் நபர்களுக்கிடையில் போதிய அளவு தூரத்தைப் பேணுவதும் சவர்க்காரமும் தண்ணீரும் கைதிகளுக்குத் தாராளமாகக் கிடைக்காத காரணத்தால், கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவது உள்ளிட்ட பொதுவான தடுப்பு நடவடிக்கைகளைக் கைதிகளினால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. மேலும் சிறைச்சாலைக்குப் பணியாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்ற காரணத்தால், சிறைச்சாலையினை மூடிவிடுவதும் சாத்தியமற்றதாகும்.

“கொவிட் 19 தொற்று ஏற்படுவது பற்றிச் சிறைக்கைதிகள் மத்தியிலும் பணியாளர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சத்தை விலக்குவதற்கு, சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதும் ஏனைய நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். இவ்வாறான அச்சங்கள் பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்குக் காரணமாகியுள்ளதுடன், அநுராதபுரச் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டால்  மரணங்கள் ஏற்படுவதற்கும் கைதிகளுக்குக் காயங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது.

“மேலும் இந்தியா, கொலம்பியா, இத்தாலி போன்ற ஏனைய நாடுகளிலும் கொவிட் 19 காரணமாக அமைதியின்மையும் மரணங்களும் சம்பவித்துள்ளன. சிறைச்சாலைகள் தொற்றுப் பெருகும் இடங்களாக மட்டுமன்றி அமைதியின்மையும் வன்முறையும் பரவக்கூடிய இடங்களாகவும் மாறும் சாத்தியத்தையே இது குறிக்கின்றது.

“இலங்கையின் கைதிகளில் 50%க்கும் அதிகமானவர்கள் விளக்கமறியல் கைதிகள் என்பது எமக்குத் தெரியும். மேலும் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் தமது அபராத தொகையைச் செலுத்தத் தவறியவர்களாகவே உள்ளனர். சிறிய குற்றங்கள் மற்றும் பிணை வழங்கப்படக்கூடிய குற்றங்களுக்குப் பிணை வழங்க மறுப்பதும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யத் தவறுகின்றமையும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கும் முடிவதற்கும் நீண்ட காலம் காத்திருப்பதுமே சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாக மாறுவதற்கான காரணங்களாகும்.

“'வீட்டு விடுப்பு' மற்றும் 'உரிமத் திட்டம்' போன்ற தற்போதுள்ள திட்டங்கள் நன்கு பயனளித்துள்ளதெனச் சிறைச்சாலைத் திணைக்களப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இவற்றினை அமுல்படுத்துவதில் காணப்படும் அரசநிர்வாகத் தாமதங்கள் தீர்க்கப்படவேண்டும்.

“கொவிட் 19 தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்காகச் சிறைக்கைதிகளை விடுவிக்குமாறும் இது தொடர்பிலான குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படலாம் என்றும் ஜனாதிபதியிடமும் விடயத்துக்குப்  பொறுப்பான அமைச்சரிடமும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு 2020, மார்ச் 16 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது.

“இது உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என நாம் எதிர்பார்ப்பதுடன் 2020 மார்ச் 26ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்துக்கு முன்னர், சிறைக்கைதிகளின் விடுவிப்பதற்கானப் பூரணமான தெரிவடிப்படையை உருவாக்குவதற்காக நாம் சில மேலதிக ஆலோசனைகளையும் பகிர விரும்புகின்றோம்.  குறிப்பாகக் கடுமையான நோய்களினால் அல்லது மரணத்தினை ஏற்படுத்தும் முற்றிய நோயினால் வருந்துபவர்களின் பாதிப்புறுநிலையினையும் முதியவர்களின் பாதிப்புறுநிலையினையும் தமது தாய்மார்களுடன் சிறைச்சாலையில் வாழும் பிள்ளைகளின் பாதிப்புறுநிலையினையும் உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

“சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கும் கொவிட்-19 தொற்றைத் தடுப்பதற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பிணை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளைப் பரிசீலித்து அமுல்படுத்துமாறு நாம் கௌரவ நீதி அமைச்சரின் தலைமையிலான நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

“குற்றச்செயல்களின் தீவிரம், தன்மை ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு, தற்போதுள்ள நடவடிக்கைகளுடன் விசேட நீதிமன்ற விசாரணைகள், நிர்வாக மீளாய்வுகள் மற்றும் பொருத்தமானபோது ஜனாதிபதியின் மன்னிப்பு போன்ற விசேட அவசர நடவடிக்கைகள் இணைந்த பரிபூரணமான அணுகுமுறைக்கான வேண்டுகோளை நாம் விடுக்கின்றோம். இச்செயல்விதிகளை அமுல்படுத்துகையில், வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக, விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளைத் தெரிவுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் தெரிவடிப்படையினையும் அவ்வாறு விடுவிக்கப்படவுள்ள ஒவ்வொரு வகையிலுமான சிறைக்கைதிகளின் எண்ணிக்கையினையும் பகிரங்கப்படுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உடனடி நடவடிக்கைகள்

பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைத்தல்

கட்டாயமான தேவையின்றி ஆட்களைப் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைப்பதைத் தவிர்த்தல்.

இயலுமான அளவு நபர்களைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்தல்

தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பால்யக் குற்றவாளிகளையும் கங்கொடவில 'மெத்செவனவில்' உள்ள தாய்மார்களையும் அவர்களின் பிள்ளைகளையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் கலந்துரையாடலின் பேரில் மீளாய்வு செய்து விடுவிக்குமாறும் நாம் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

5 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுடன் சிறையில் இருக்கும் பெண்களை விடுதலை செய்யவும்.

2 வருடங்களுக்குக் குறைவான தண்டனையினைப் பெற்றுள்ளவர்களை சமுதாய மட்ட நல்வழிப்படுத்தல் மையங்கள் கட்டளைகள் மூலம் விடுவிக்கப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கும் தீர்மானத்தினைச் சட்டமா அதிபர் துரிதப்படுத்தவேண்டும்

பின்வரும் வகையைச் சேர்ந்த கைதிகளை விடுதலை செய்தல்:

விளக்கமறியல் கைதிகள்

நீதிமுறைமை:

பிணை நிபந்தனைகளை மீளாய்வுசெய்து மாற்றி, பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல்.

சிறிய மற்றும் பிணை வழங்கப்படக்கூடிய மற்றும் வன்முறையற்ற குற்றச்செயல்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்குப் பிணை வழங்கல், குறிப்பாகப் போதிய அளவு சட்டரீதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு. 

கடந்த வாரத்திலிருந்து நீதிமன்றப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகத் தமது வழக்குகள் ஒத்திப்போடப்பட்டுள்ளமையினால் பிணை கோர முடியாதவர்களையும் தாம் இழைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையினை செலுத்தமுடியாதவர்களையும் பிணையில் விடுதலை செய்தல்.

குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள்

அபராதத்தொகையை செலுத்தமுடியாத காரணத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்தல்.

ஆறு மாதங்களுக்குக் குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை நேரகாலத்துடன் நிபந்தனையின்றி விடுதலை செய்தல். 

தமது தண்டனைக் காலத்தில் ஆறு மாதங்களே எஞ்சியிருப்பவர்களை நேரகாலத்துடன் நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.

தகைமையானவர்களை வீட்டு விடுப்பிலும் உரிமத்திலும் விடுதலை செய்தல்.

மீரிஹானயிலுள்ள குடிவரவுத் தடுப்பு மையம்

விடுதலை செய்க:

ஐ.நா.அகதிகள் பேரவையில் தமது விண்ணப்பங்கள் அல்லது மேன்முறையீடுகள் நிலுவையாகவுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் தங்களின் புலம்பெயர்வு விண்ணப்பங்கள் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் முன் நிலுவையாக இருப்பவர்கள்.

மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள். இந்த நபர்களுக்குச் சமுதாயத்தில் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிகள் இல்லாதிருக்கையில் அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிட வசதிகளை வழங்கல்

2. குறுகிய கால மற்றும் இடைக்கால நடவடிக்கைகள்

குற்றச்செயலின் தன்மை மற்றும் அதன் பாரதூரம் ஆகியவற்றினைப் பரிசீலித்து பின்வருவோரைப் பிணையில் விடுதலை செய்வதை நீதிச்சேவை மீளாய்வு செய்து பரிசீலிக்கவேண்டும்:

குற்றத்தீர்ப்பளிக்கப்படாமல் பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் பல வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெறும் நபர்கள்

மேன்முறையீடு நிலுவையில் இருப்பவர்கள்.

“குடும்பங்களும் ஏனையோரும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பின்வருவனவற்றினை முன்மொழிகின்றோம்:

 

“சிறைக்கைதிகள் தமது குடும்பங்களுடன் தொடர்பாடுவதை வசதிப்படுத்துவதற்காக மேற்பார்வையுடன் கூடிய தொடர்பாடல் முறைமைகள் (தொலைபேசி) அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். இதன் மூலம் கைதிகளினதும் அவர்களின் குடும்பங்களினதும் சிறைச்சாலைப் பணியாளர்களினதும் மன அழுத்தமும் மன அதிர்ச்சிவடுவும் அச்சங்களும் அகற்றப்படும். சில நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆலோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை பொதுப் பரப்பில் உள்ளன.

“மேலும், சிறைச்சாலைக்கு உறவினர்கள் விஜயம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதால் சிறைக்கைதிகளுக்கு சவர்க்காரம், பற்பசை மற்றும் மாதவிடாய்த் துவாலைகள் போன்ற தனிநபர் துப்பரவுக்கான பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்ற காரணத்தினால் இவற்றினைக் கொள்வனவுசெய்து கைதிகளுக்கு வழங்குவதற்கான நிதி வளத்தினை வழங்குமாறு நாம் சிறைச்சாலைகள் திணைக்களத்தினை வேண்டுகின்றோம்.

“கொவிட் 19 காரணமாகச் சிறைக்கைதிகளை விடுவிப்பது ஈரான், பஹ்ரைன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெற்றுவருவதுடன் உலகின் ஏனைய நாடுகளிலும் திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இது தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளன. குறிப்பாக உத்தேச நெரிசல் குறைப்பு நடவடிக்கைகளை 'உடனடியாகவும் 2 நாட்களிலும்' மேற்கொள்ளுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த திங்களன்று விடுத்த பணிப்புரையினை நாம் சுட்டிக்காட்ட விரும்புவதுடன் கைதிகளின் விடுவிப்புத் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் கொவிட் 19 எமது சிறைச்சாலைகளில் பரவுவதற்கான அதிகரித்த ஆபத்துக் காணப்படுகின்றது என்பதை  உணர்ந்துகொள்ளுமாறும் நாம் உங்களைத் தயவாக வேண்டுகின்றோம். பொதுநலன் கருதி விடுவிப்பிற்கான தெரிவடிப்படை பற்றிய இறுதித் தீர்மானத்தினை எடுத்து இந்த வார முடிவில் இருந்து விடுவிப்பினை அமுல்படுத்த ஆரம்பிக்குமாறு நாம் உங்களை வேண்டுகின்றோம்.

“விடுவிப்புக்கு மேலதிகமாக, சிறைச்சாலைகளில் தொற்றைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்கும் நோயறிகுறி உடையவர்களைத் தடுத்துக் கண்காணித்து மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாம் பரிந்துரைக்கின்றோம். அத்துடன், கொவிட் 19 இனைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் சிறைக்கைதிகளுக்கும் சிறைச்சாலைப் பணியாளர்களுக்கும் மேற்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக சிறைச்சாலை மருத்துவ நிலையங்களிலும் வைத்தியசாலையிலும் பணியாற்றும் சிறைச்சாலைப் பணியாளர்களுக்கு அவசியமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் நாம் பரிந்துரைக்கின்றோம்.

“மேலதிக விவரங்களுக்கு திரு. சேனக பெரெரா, சட்டத்தரணியை பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்: 077-2817164 / 071-4453890” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .