2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சுதந்திர தினத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Freelancer   / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “நாளைய சவால்களை வெற்றிக்கொள்ளும் வளமான நாள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த வருடம் சுதந்திர தின நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ளது என்றார்.

மேலும் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் சுமார் 6,500 பேர் வரை கலந்துகொள்ளவுள்ளனர் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இதில் 3,463 இராணுவத்தினரும் 919 கடற்படையினரும் 804 விமானப் படையினர், 336 பொலிஸார், 437 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்  மாணவர் படையணியைச் சேர்ந்த 259 பேரும் கலந்துகொள்வர் என்று தெரிவித்தார்.

இவ்வாறு கலந்துகொள்ளும் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி விசேட உயிர்க்குமிழி (பயோபபிள்) முறையில் கலந்துகொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரதினத்தை முன்னிட்டு, கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தை மய்யப்படுத்தி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், இதற்காக பொலிஸ், விசேட பொலிஸ் பிரிவு, இராணுவத்தினர் அடங்கலாக 3,000 பேருக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.

சுதந்திர தின விழா நடைபெறும் 4ஆம் திகதியன்று, 21 வீதிகளின் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முன்னாயத்த பயிற்சி 3ஆம் திகதி வரை நடைபெறும் என்றும்  இதற்காக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்காக காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை  சில சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை, இம்முறை சுதந்திர தின பேரணியின் போது, கடற்படையினர் 25 மரியாதை வேட்டுகள் பகல் 12 மணியளவில் காலி முகத்திடலில் தீர்க்கப்படும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதன்ன தெரிவித்தார்.

அத்துடன் விமானப் படையினரின் சாகசங்களும் வானில் நிகழ்த்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .