2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் தலைமையில் Disrupt Asia 2025”

Editorial   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025”  பிரதான மாநாடு கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் Disrupt Asia 2025, புதன்கிழமை (17)  ஆரம்பமானதோடு  செப்டம்பர் 20 வரை நடைபெறும்.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தெற்காசியாவில் வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதே இந்த மாநாட்டின்  நோக்கமாகும். புதிய தொழில்முனைவு  மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது சிறந்த பக்கபலமாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற பிரதான மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்முனைவோர் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

நிகழ்வில்  உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று  தெரிவித்தார்.“Disrupt Asia 2025”   என்பது நாட்டில் இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் சிறந்த பக்கபலம் என்று பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் திட்டம் நாட்டில் திறமையான தொழில்முனைவோருக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் என்றும் தெற்காசியாவில் புத்தாக்கத்திற்கான  நுழைவாயிலாக இலங்கையை நிலைநிறுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு பிரதான உரை நிகழ்த்திய கலாநிதி  ஹான்ஸ் விஜயசூரிய, இலங்கையின் டிஜிட்டல்மயமாக்கலின் நோக்கங்களையும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டங்களையும் விளக்கினார். டிஜிட்டல் ஏற்றுமதிகளை மூன்று மடங்காக அதிகரித்தல், டிஜிட்டல் திறமை  எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல் மற்றும் இலங்கையை உலகளாவிய டிஜிட்டல் தரநிலைகளில் முன்னணிக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் இலக்குகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் புதிய தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் குறைவான முதலீட்டுத் துறைகளாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த பெறுமதியான முதலீட்டு வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று உள்ளூர் மற்றும் உலகளாவிய பங்காளர்களை வலியுறுத்தினார். டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர் வாய்ப்பு உள்ளது என்றும், அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதே அதைவிட முக்கியமான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார். இப்போது முதலீடு செய்து இந்த மாற்றத்தில் பங்காளிகளாக மாறுபவர்கள் நாளைய வெற்றியாளர்களாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழல், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான பாதுகாப்பான சூழல் மற்றும் அரசாங்கத்தின் டிஜிட்டல்  கட்டமைப்புகளை தனியார் துறைக்குத் திறக்க அனுமதிக்கும் புதிய கொள்கைகள் குறித்தும்  அவர் இங்கு எடுத்துரைத்தார்.

Paytm இன்  ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று  அதிகாரி விஜய் சேகர் சர்மா மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின்  சிரேஸ்ட  ஆலோசகரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான  கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட உலகளாவிய நிபுணர்களுடனான கலந்துரையாடலும்  நடத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான  ஜனாதிபதியின் சிரேஸ்ட  ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் உலக வங்கி குழுமத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான  பணிப்பாளர் கெவோர்க் சார்கிசியன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X