Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தபோது கைதான 50 கல்லூரி மாணவர்கள் இன்று (16) விடுவிக்கப்பட்டனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டம், வன்முறையாக மாறி உள்ளது. இந்தநிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் அருகாமையில் இருக்கும் பிரென்ட்ஸ் காலனி பகுதியில் மற்றும் இன்னொரு இடத்தில் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இரு பொலிஸ் வாகனங்கள் மற்றும் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன.
தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதமடைந்தது. 2 பேர் காயம் அடைந்தனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து முழக்கங்களை எழுப்பியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஒக்ஹ்லா விஹார், ஜசோலா விஹார் ஷஹீன் பாக் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. மேற்கண்ட நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இரவில் போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் திடீரென மோதினர். இதில் பொலிஸார் மீது கற்கள் வீசப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றி பொலிஸார் நுழைந்தனர்.
மாணவர்கள் மீது பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் துப்பாக்கியால் சுட்டதாகவும் மாணவர்கள் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
பொலிஸாருக்கு பயந்து கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளுக்குள் ஒளிந்திருந்த சில மாணவர்கள் ரத்தக்காயங்களுடன் அலறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வலம் வந்தன.
ஆனால், இதை பொலிஸார் தரப்பு மறுத்தது. யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், போராட்டக்காரர்கள், பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் என சுமார் 60 பேர் காயமடைந்ததாக டெல்லி ஊடகங்கள் தெரிவித்தன.
மாணவர்களுடன் சில தீயசக்திகளும் இணைந்து கொண்டதால் போராட்டம் கலவரமாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கலவரத்தை தூண்டிவிட்டதாகவும் 50 மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பிடிபட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் காயமடைந்த மாணவர்களை தரமான மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் டெல்லி சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் ஜப்ருல் இஸ்லாம் கான் வலியுறுத்தினார்.
மேலும், பொலிஸாரின் பலப்பிரயோகம் தொடர்பாக இன்று (16) பிற்பகல் 3 மணிக்குள் டெல்லி சிறுபான்மையினர் நல ஆணையத்திடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நேற்று பின்னிரவில் அவர் எச்சரித்தார்.
இதைதொடர்ந்து, கைதான 50 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்காஜி காவல் நிலையத்தில் இருந்து 35 மாணவர்களும் நியூ பிரென்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் இருந்து 15 மாணவர்களும் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டதாக டெல்லி பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025