2025 மே 17, சனிக்கிழமை

தாஜுதீனின் கார் எரிந்தமைக்கான காரணத்தை நிர்ணயிக்க முடியாது: டொயோடா

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மர்மமான முறையில் இறந்த றகர் விளையாட்டு வீரரான முஹமட் வசிம் தாஜூதீன் முஞ-6543 என்ற இலக்கத்தைக்கொண்ட காரானது கடுமையாக எரிந்திருந்தமையால் அக்கார் தீப்பற்றி எரிந்தமைக்கான  காரணத்தை நிர்ணயிக்க முடியவில்லை என்று டொயோடா நிறுவனம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் இலங்கைக்கான டோயோட நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எப்.எல்.வில்சன் பெரேரா, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸுக்கு சோதனை தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதம், 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வசிம் தாஜுதீனுடன் குறித்த வண்டியும் தீக்கிரையானமை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கடந்த  14ஆம் திகதியன்று  நீதிமன்றம் விடுத்த கட்டளைக்கு அமைவாகவே இந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடமான நாரஹேன்பிட்டிய வீதி மற்றும் சாலிகா விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர்,  மோட்டார் போக்குவரத்து பிரதி ஆணையாளர்  (தொழில்நுட்ப), அரசாங்கத்தின் பகுப்பாய்வு திணைக்களத்தின் பிரதி பரிசோதகர், இரகசிய பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரிகளான ஐ.விக்கிரமசேகர, பொ.ப.பிரசாத் சில்வா, சோகோ அதிகாரி பொ.ப.பிரசாத் சில்வா மற்றும் டோயோடா தனியார் நிறுவனத்தின் சேவை பிரிவின் உத்தியோகத்தர் மதிஜ சமரநாயக ஆகியோர் முன்னிலையிலேயே  இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கேட்கப்பட்டிருந்த பல கேள்விக்களுக்கு அந்த நிறுவனத்தினால் பதில் அளிக்கப்பட்டிருந்தது. 

குறித்த காரின் முன்பகுதி, இடது பின்பகுதி, வலது பின்பகுதி மற்றும் காரின் அடிப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தன. அந்த காரின் உட்பகுதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்ததினால் சாரதிக்கு ஏற்பட்டிருக்ககூடிய அழுத்தம் தொடர்பில் எதனையும் குறிப்பிடமுடியாது என்றும் அக்கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விபத்து சம்பவத்தில் வாகனத்தின் சுக்கான் கழரவில்லை என்றும் காரில் ஏற்பட்ட தீயின் காரணமாக அதிகூடிய வெப்பத்தினால் அந்தச் சுக்கான் உருகியுள்ளது என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் முன், பின் சில்லுகள் சேதமடைந்துள்ளன. வாகனம் தீப்பிடித்துக்கொண்டமையால் வாகனத்தின் உட்;பகுதி மற்றும் வெளிப்புறத்தில் எரியக்கூடிய பல்வேறு பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன என்றும் கடுமையான சூட்டின் காரணமாக காரில் உருகக்கூடிய பல பகுதிகள் உருகிவிட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்டையில் குறித்த கார் டொயோடா விடிஸ் வகையை சேர்ந்தது என இனங்காணப்பட்டுள்ளது. 

குறித்த வாகனம் குறித்த நபருக்கோ வழங்கப்பட்ட முகவரியில் முன்னர் வசித்தவருக்கோ தமது நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படவில்லை எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சான்றிதழின் பிரகாரம், இந்த வாகனம் மீளமைக்கப்பட்டு (ரீக்கண்டிசன்) அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமன்றி இந்த வாகனம் தங்களுடைய நிறுவனத்தின் ஊடாக நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டது ஒன்றல்ல என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .