2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தோட்டத்தொழிலாளர்களிடம் சிறுநீரகம் களவெடுப்பு: ராஜித

Kanagaraj   / 2016 ஜனவரி 21 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

சிறுநீரகம் மாற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய இலங்கை வைத்தியர்கள் அறுவர் தொடர்பான விசாரணை அறிக்கை, இந்தியப் பொலிஸாரினால், இலங்கை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். உடலுறுப்புகளை, மிகவும் நெருக்கமான உறவினர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், அவற்றைப் பணத்துக்காக வழங்க முடியாது என்றும் கூறினார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியர்களின் சிறுநீரகங்கள், இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வைத்து மாற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய இலங்கை வைத்தியர்கள் அறுவர் தொடர்பான விசாரணை அறிக்கை, இந்திய பொலிஸாரினால்,
இலங்கை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையை நாம் கோரியுள்ளோம். இன்னும் ஏழு நாட்களில் அவ்வறிக்கை எமக்குக் கிடைக்கும். அதுவரையிலும், தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்துகொள்ளவுள்ள வெளிநாட்டவர்களுக்கான சிகிச்சைகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரகங்களை மாற்றுவதற்கான வைத்திய முறைமையொன்று உள்ளது. அது, உலகத்துக்கே பொதுவானதாகும். எனினும், அவை வர்த்தக நோக்கங்களுடன் முன்னெடுக்கப்பட்டால், அதில், சுகாதார அமைச்சு தலையிடும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால். அவர்களுடைய வைத்தியர் பதவி பறிக்கப்படும்.

'இந்தத் தானம், தங்களுடைய விருப்பத்தின் பேரிலா செய்யப்படுகின்றது என்பதை வைத்தியர்கள் கேட்கவேண்டும். இலங்கையில், தேரர்கள் உள்ளிட்டோரும் உடலுறுப்புகளைத் தானம் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றனர்' என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மிகவும் களவான முறையில், சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தியர்களின் 60 சிறுநீரகங்களை தலா, 30 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு சுரேஸ் பிரஜாபதி என்ற நபர், விற்பனை செய்துள்ளார் என்றும், சிறுநீரகங்களைத் தானமாக வழங்கியவர்களுக்கு, வெறும் 5 இலட்சம் இந்திய ரூபாயினையே வழங்கியுள்ளார் என்றும், விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X