2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

‘த.தே.கூ உதாசீனப் போக்கு’

Nirosh   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதாசீனப் போக்கையே கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறி வருகின்ற நிலையில், சந்திப்புகளை மேற்கொள்ள அவர் எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். 

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் தொடர்பில், தமிழர்மிரருக்கு நேற்று (24) கருத்துத் தெரிவிக்கும்போதே, அருட்தந்தை மா. சத்திவேல், மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் எட்டுப் பேர் முன்னெடுத்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால், அவர்களின் உடல் நிலை மோசடைந்துள்ளதோடு, நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுள் இருவர், நேற்று (24) சிகிச்சைபெற்று திரும்பினரெனவும் கூறினார். 

நாடுமுழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 107 அரசியல் கைதிகளில் பலர், தண்டனைக் காலத்தைவிட அதிகமான காலங்கள் தண்டனை அனுபவித்து வந்துள்ளனரெனவும், ஆகவே ஜனாதிபதி இதில் தலையிட்டு, உடனடியாக எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார் 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார், ஆனால், சட்டமா அதிபர் திணைக்களம், அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தைச் சட்டரீதியாகவே பார்க்கும், அரசியல் ரீதியாகப் பார்க்காது” என எடுத்துரைத்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்த 10 கோரிக்கைகளில், அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று எனக்கூறிய அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்ற பிரதமர் ரணில், வழங்கிய வாக்குறுதியை ஏன் இதுவரையில் நிறைவேற்றவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X