2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

துறைமுக நகரத் திட்டத்தில் எவரும் முதலிடலாம்: ரணில்

Thipaan   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன்

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ள துறைமுக நகரத் திட்டத்தில், அனைத்து நாட்டினரும் முதலிட முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், நாடு திரும்பும் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார்.

'துறைமுக நகரத் திட்டம் என்பது சீனாவுக்கு மாத்திரமானதல்ல. அது தென்னாசியாவின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் முதலிடுவதற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஆகவே, இத்திட்டத்தில் அனைத்து நாடுகளும் முதலிட முடியும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எமது பொருளாதாரத் திட்டத்தினை நாங்கள் மாற்றவில்லை. ஆனால், துறைமுக நகரத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்படாமலிருந்த விடயங்களைச் சரிசெய்துள்ளோம். துறைமுக நகரத் திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ள காணி, அரசாங்கத்துக்கே சொந்தமானது. அதனை 99 வருட நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கின்றோம். இதுவொரு முதலீட்டுத் திட்ட கட்டுமானமாகும். இத்திட்டத்தில் முதலிட விரும்புபவர்கள் எமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முதலிட முடியும்' எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

துறைமுகத் திட்டத்தினால் அண்டை நாடுகளில் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுமா என்று கேட்கப்பட்டபோது, 'தேசிய பாதுகாப்புக்கோ அல்லது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கோ இத்திட்டத்தினால் பாதகநிலை ஏற்படாது. இத்திட்டமானது, தெற்காசியாவின் பொருளாதார மத்திய நிலையம் என்ற அந்தஸ்தை இலங்கை பெறுவதற்கான அடித்தளமாகவே பார்க்கப்படவேண்டும்.

அத்தோடு கடல்வளப் பாதுகாப்பு என்பது சர்வதேச கடல் எல்லைப் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம். ஆகவே, அதனைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எனவே, அண்டை நாடுகளுடனும் சர்வதேசத்துடனும் பாதுகாப்புத் தொடர்பாகக் கலந்தாலோசித்த பின்னர்தான் இத்திட்டத்தினை ஆரம்பிக்க முடிவெடுத்தோம்' எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X