2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழர்களின் பாரம்பரிய இடம் பறிக்கப்படுகிறது

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சாலை அமைப்பதாக கூறிக் கொண்டு தமிழர்களின் உரிமைகளையும் இருப்பையும் இல்லாதொழிக்கும் செயற்பாடுகளே  முன்னெடுக்கப்படுகிறது என்றும் தமிழர்கள் பாரம்பரியமான இடம் அழிக்கப்பட்டு பறிக்கப்படுகிறது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளை, சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி என்ற கிராமம் புராதன பின்னணியை கொண்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகாலமாக தமிழர்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வந்தேறு குடிகள் அல்ல இந்த கிராமத்தில் தோன்றிய குடிகள்” என்று குறிப்பிட்டார்.

டோக்கியோ  சிமெந்து நிறுவனத்துக்காக இந்த கிராம பகுதியில் இருக்கும் முருகை கற்பாறைகளை ஆழமாக அகழ்ந்து எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள பொன்னாவெளி கிராமம் இலங்கை வரைப்படத்தில் இருந்து காணாமல் ஆக்கப்படவுள்ளது என்றும் எம்.பி குறிப்பிட்டார்.

கனிய வளம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழர்களின் பூர்வீக இடங்கள் அபகரிக்கப்படுகின்றன எனவும் கடல் வளங்களை அகழ்வதால் கடல்நீர் பொன்னாவெளி கிராமத்திற்குள் உட்புகுந்து முழு கிராமத்தையும் அழிக்கும் அபாயம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
 
2016 ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் ஆய்வு நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படுகிறது, வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படாது எனக் குறிப்பிட்டார்கள் என்று தெரிவித்த அவர்,  தற்போது இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் இயல்பாகவே தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறும் இக்கட்டான நிலை தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த சீமெந்து நிறுவனம் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் இப்பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தீர்வு காண யாழ், பல்கலைக்கழகம் ஆய்வு நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழர்களின்  இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .