Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திரதின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாதென, துறைசார் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளாரென வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழிபேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், இலங்கை அரசமைப்பில், இணை ஆட்சி மொழியாகவும் இணைத் தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியைப் புறந்தள்ளி, இலங்கையை மொழி, இன ரீதியாகப் பிரிப்பது, ஒரு பிரிவினைவாதச் செயலெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உங்கள் பதவியேற்பு நிகழ்வில், ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாகச் செயற்படுவேன்’ என்று நாட்டுக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில், தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை இரத்துச்செய்ய, துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், மொழி உரிமைகளைப் பயன்படுத்தி, நாட்டில் வாழும் இரண்டு மொழிகளைப் பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில், உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக கூறியுள்ளீர்கள்.
“எனினும், ‘ஒரே நாடு மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்களம், தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளைத் தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாம் என வேண்டுகிறேன்” எனவும், மனோ எம்.பி கோரியுள்ளார்.
சிங்களம், தமிழிலும் தேசிய கீதத்தைப் பாடுவது, தேசாபிமான நடவடிக்கையெனத் தெரிவித்துள்ள அவர், சில போலித் தேசியவாதிகள், மொழி, இனங்களை ஒன்று சேர்க்கும் தேசாபிமான நடவடிக்கையை நிறுத்திவிட முயல்கிறார்கள் என்றும் அதற்கு இடம்கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும், அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago