2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திலீபன் நினைவேந்தல் தடை முயற்சி: நீதிமன்றில் சுமந்திரன் ஆஜர்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் விடிவுக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த திலீபனின் நினைவு தினத்தைத் தடைசெய்யும் நோக்கில், பொலிஸாரால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட தடைக் கோரிக்கைக்கு எதிராக, நாளை (25) செவ்வாய்க்கிழமை, நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கிணங்க, யாழ். மாநகர ஆணையாளரை, நீதிமன்றத்தில் நாளை முன்னிலையாகுமாறு, யாழ். நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (21) மாலையில் யாழ். நீதவான் சின்னத்துரை சதீஸ்தரனின், அலுவலக அறையில் பிரசன்னமாகி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தனர்.  

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஓர் உறுப்பினர், உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தமையை நினைவுகூர்வதைத் தடைசெய்யுமாறும், நினைவுத்தூபியைச் சுற்றி கம்பி வேலிஅடிக்கப்பட்டமை, கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதன் கீழ் படங்கள் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை வேண்டுமெனவும் பொலிஸார் கோரியுள்ளனர். 

இந்தச் செயற்பாட்டு வேலைகளை மேற்கொள்ளும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு இது தொடர்பான தடை உத்தரவை வழங்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கிணங்கவே, யாழ். மாநகர சபை ஆணையாளரை நாளை செவ்வாய்க்கிழமை (25) நீதிமன்றில் முன்னிலையாகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் இந்நடவடிக்கைக்கு எதிராகவே, நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், நீதிமன்றில் நேரில் ஆஜராகி வாதாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X