Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'இஸ்லாமிய அடிப்படை' வாதம் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டுக் கல்வி பயின்று, தொழில் புரிந்து அல்லது வேறு பணிகளுக்காகச் சென்று திரும்பி வருகின்ற முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் இந்நாட்டிலுள்ள இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்கள் ஆகியோரின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன' என்று சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.எம். மரிக்கார் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கடந்த மூன்று மாதத்தினுள் விசேட அதிரடிப்படையினரால் தெஹிவளை-கவுடான பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டதா? அங்குள்ள வீடொன்றிலிருந்து தற்கொலைக்குண்டுகளுடன் நபர்களை, அவர்கள் கைதுசெய்தனரா? ஆமெனின், இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும்
தெஹிவளை-கவுடான பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் கைதுசெய்யப்பட்டனரா?, ஆமெனின், இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மேற்கூறப்பட்டவாறு நடந்ததென கூறிவரும் ஆட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார்.
இலங்கை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஓர் இரையாகுமென அல்லது உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான ஓர் இடமாகுமென புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டுள்ளதா? ஆமெனில் இதிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விகளை கேட்டிருந்தார்.
கேள்விகளுக்கு அளித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலிஸ் அதிரடிப் படையினரால் கடந்த 03 மாத காலப் பகுதியினுள் தெஹிவளை, கவுடான பிரதேசத்தில் எந்தவொரு நடவடிக்கையும் தொடரப்படவில்லை.
எனினும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றவர்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெறும் பட்சத்தில், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளனவா என்பது பற்றி பரந்த அளவிலும் தொடர்ச்சியாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளன.
முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், கல்வி அமைச்சு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, தேசிய சூரா கவுன்சில் போன்ற சிவில் அமைப்புகள் இணைந்து, கடும்போக்குடைய சமய அமைப்புகள் ஊடாக இலங்கை முஸ்லிம்கள், கடும்போக்கான செயற்பாடுகளின் பக்கம் கவனம் செலுத்துவதைத் தடுப்பதற்கான சமய ரீதியான கலந்துரையாடல் ஒன்றினைக் கட்டியெழுப்புதல் மற்றும் விழிப்பூட்டல்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து, பாடசாலை முறைமையினுள் மாணவர் இணைப்பை அனைத்து இனங்களும் உள்ளடக்கப்படும் வகையில் மாற்றியமைத்தல்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டுக் கல்வி பயின்று, தொழில்புரிந்து அல்லது வேறு பணிகளுக்காகச் சென்று திரும்பி வருகின்ற முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் இந்நாட்டிலுள்ள இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்கள் ஆகியோரின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் செயற்பாடுகளைக் கண்காணித்தல்.
இணையத்தளத்தின் சமூக வலையமைப்புக்கள் ஊடாக கடும்போக்குடைய கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுத்தல், பாதிப்புக்களை ஏற்படுத்தும் வெளியீடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல், ஐ.எஸ்.ஐ.எஸ் போக்கு மற்றும் எண்ணக்கருக்களைக் கொண்ட கணக்குகளைச் செயலிழக்கச் செய்தல், அவ்வாறான கடும்போக்குடைய கருத்துக்கள் வெளியாகும் இடங்கள் மற்றும் பரப்புவதற்கான சொற்பொழிவுகளை ஆற்றுகின்றவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய குறுக்குக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'வெளிநாட்டிலுள்ள புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புகளை பேணிவருகின்றோம். பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் கிடைக்குமாயின் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .