2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நிலக்கரிக் கொள்வனவில் முறைகேடு?

Gavitha   / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான நிலக்கரிக் கொள்வனவில், தவறான முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. குறைந்த விலைக்குக் கிடைக்க வேண்டிய நிலக்கரிக்குப் பதிலாக, அதிக விலையுடைய நிலக்கரிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1.9 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரிக்கான ஒப்பந்தம் சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிறைஸஸ் (தனியார்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு மெற்றித் தொன்னுக்கு 58 அமெரிக்க டொலர்கள் எனும் விலையிலேயே, இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், லங்கா நிலக்கரி நிறுவனம் (LC), இதைவிடக் குறைவான மூன்று ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே, தனக்கான நிலக்கரிகளைக் கொள்வனவு செய்து வருகின்றது.

அதில் ஓர் ஒப்பந்தத்தின்படி, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 55.70 அமெரிக்க டொலர்களும், மற்றையதுக்கு மெற்றிக் தொன்னுக்கு 51.29 அமெரிக்க டொலர்களும், மூன்றாவதற்கு, 49.85 அமெரிக்க டொலர்களுமாக, அந்நிறுவனம் செலுத்தி வருகின்றது.

சுவிஸ் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கும் முடிவை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்வனவுச் செயற்குழுவே எடுத்துள்ளது. குறைவான ஏலத்தொகையை விட 8.15 அமெரிக்க டொலர்கள் அதிகமான விலைக்கே, இந்தக் கொள்வனவுக்கு முடிவெடுத்துள்ளது.

இதன்படி, 1.9 மில்லியன் மெற்றிக் தொன்னுக்காக இலங்கை, 15.485 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அதிகமாகச் செலுத்தவுள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக, கொள்வனவு முறைப்பாட்டுச் சபையிடம், ஏனைய நான்கு ஏலத்தொகையாளர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த சுவிஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் கொள்வனவை நிறுத்தி, புதிய ஏலத்தை நடாத்துமாறு, அமைச்சரவைக்கு அச்சபை பிரேரித்திருந்தது. எனினும், அந்த ஏலம் நிறுத்தப்படாததோடு, புதிய ஏலமும் கோரப்படாவில்லை. மாறாக, சுவிஸ் சிங்கப்பூர் நிறுவனத்துக்கே அந்த ஏலத்தை வழங்குமாறு, கொள்வனவுச் செயற்குழு பரிந்துரை செய்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X