2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண் எம்.பிக்களுக்கு பாலியல் தொந்தரவில்லை

Gavitha   / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற வளாகத்துக்குள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாலியல் தொந்தரவுகளுக்கோ அல்லது வேறு தொந்தரவுகளுக்கோ உட்படுத்தப்படுவதாக வெளியான செய்தியில், எவ்வித உண்மையும் இல்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான செய்திகள் வெளியானதை அடிப்படையாகக் கொண்டு, உண்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொண்டபோதும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்துக்குள், தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ  பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுமாயின், அதற்கெதிராக நடவடிக்கையெடுப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தானும், தனது அலுவலக அதிகாரிகளும் பெண் எம்.பிக்களிடம் விசாரணை நடத்தியதாகவும் அதன்போது, அவ்வாறான தொந்தரவுகள் இடம்பெற்றதாகக் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாலியல்  தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவார்களாயின் அவை தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டுவருமாறும், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின், அந்தஸ்து பார்க்காது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சபாநாயகருக்கோ, பிரதி சபாநாயகருக்கோ அல்லது நாடாளுமன்ற அதிகாரிகளுக்கோ இதுவரையிலும் முறைப்பாடு எதுவும் கிடைக்கப்படவில்லை என்று சபாநாயகர் காரியாலயம் தெரிவித்திருந்தது.

அரசியலில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம், சட்டங்களை இயற்றிவரும் நிலையில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், தாம் நாடாளுமன்ற வளாகத்தினுள்ளேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமது கட்சி மேலிடங்களிடம் முறையிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

அண்மையில் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது கையைப் பிடித்ததாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், தமது கட்சி மேலிடத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதேவேளை, நாடாளுமன்ற அமர்வு முடிவடைந்த சில நிமிடங்களில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தம்மிடம் ஆபாசமாகவும் சொல்லத்தகாத வார்த்தைகளாலும் பேசியதாக மற்றுமொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர், தமது கட்சி மேலிடத்தில் முறையிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X