2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புலிகள் கோரிய தனிநாட்டைக் கோரும் சி.வி.யை கைது செய்

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

புலிப் பயங்கரவாதிகளினால் துப்பாக்கி முனையில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையை, முன்வைத்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைக் கைதுசெய்து, அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஹல ராவய அமைப்பு கோரியுள்ளது.

நாட்டில், பெரும்பான்மையான மக்களாக சிங்களவர்கள் இருப்பார்களாயின், அந்த இன விகிதாசாரத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறாயின், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனை விலக்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவராக சிங்களவரை நியமிக்கவேண்டும் என்றும் அவ்வமைப்புக் கோரியுள்ளது.

கொழும்பு-05இல் உள்ள பொதுபலசேனா தலைமையகத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை(19)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, சிஹல ராவயவின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதத்த தேரர், மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

அங்கு, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'பிரிவினைவாதத்துக்கு வித்திட்ட பயங்கரவாத இயக்கமான புலிப் பயங்கரவாதம், நாட்டில் மீண்டும் தலைதூக்கிகொண்டிருக்கின்றது.  புலிப்பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் அவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. ஏனெனில், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனும், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து, தனிநாடொன்று நிறுவவேண்டும் என்று சி.வி கோரியுள்ளார். இந்த  தனிநாட்டு கோரிக்கையா உண்மையான நல்லிணக்கமென இந்த நல்லாட்சி அரசாங்கத்திடமும்; நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற ஜனாதிபதியிடமும் ரணில் விக்கிரமசிங்கவிடமும் நாங்கள் கேட்கின்றோம்.

30 வருடகால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து, 27 ஆயிரம் படைவீரர்கள் உயிரைத் தியாகம் செய்து, கொடூரமான பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கச் செய்த நாடாகவே இலங்கையை உலகம் இனங்கண்டுள்ளது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு உண்மையான சமாதானம் மலர்ந்துள்ள இந்நாட்டில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வடமாகாண முதலமைச்சர் பயணிப்பாராயின், அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தல், கருத்துரைத்தல் உள்ளிட்டமை அரசியலமைப்பை மீறுகின்ற செயல்களாகும்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். அது, பாரிய குற்றமாகும். அந்தப் பாரிய குற்றத்துக்காக அவரைக் கைதுசெய்து சிறையிலடைக்கவேண்டும்.

நாட்டில் பாதுகாப்புப் படையினர் செயற்படுவதில்லை, பொலிஸார் செயற்படுவதில்லை. இந்நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்ற நல்லாட்சி அரசாங்கம், அவரது கூற்றுக்கெதிரான தமது நிலைப்பாட்டையேனும் கூறுவதில்லை.

ஜனாதிபதி அவர்களே, பிரதமரே, அமைச்சரவையே, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பயமா என நாங்கள் கேட்கின்றோம். அரசியலமைப்பை மீறி கருத்துரைத்துள்ள சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது ஏன் என்று கேட்கின்றேன்.

வடமாகாண முதலமைச்சர், சட்டம் தெரியாத நபரல்ல, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரான சி.விக்கு, சட்டம் பற்றியும் அரசியலமைப்பு பற்றியும் பரந்தளவிலான அறிவிருக்கின்றது. தண்டனைக் கோவைச்சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் சாட்சிக் கட்டளைச் சட்டம் ஆகியன தொடர்பில் பரந்தளவான அறிவை அவர் பெற்றிருக்கின்றார்.

அவ்வாறான அறிவைப் பெற்றிருக்கின்ற வடமாகாண முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனின் தனிநாட்டு கோரிக்கையானது, நாட்டை மீண்டும் இரத்தக் களரிக்கு இட்டுச்செல்லும் மற்றும் நாட்டை பயங்கரவாதத்துக்குள் தள்ளிவிடும் கூற்றாகும்.

அரசியலமைப்பை மீறிய கூற்றை, அவர் வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதுமானதல்ல. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், வடக்கு மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர் அல்லர்.
எதிர்க்கட்சித் தலைவர், தெய்வேந்திரமுனை முதல், பருத்தித்துறை வரையிலும் வாழுகின்ற சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராய் இருத்தல் வேண்டும்.

எனினும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனோ, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினர் சாதாரண கோரிக்கையை முன்வைத்தே போராடினராம். துப்பாக்கிகளை ஏந்திய அந்தப் போராட்டத்துக்குத் தீர்வு காணவேண்டுமாயின், அமைதியாக இருந்து நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

நாட்டுக்குக்குப் பொறுப்புக் கூறுகின்ற, பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவரொருவரை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கவேண்டும். அவ்வாறு இல்லாததன் காரணத்தினால் தான், புலிகளின் கோரியதை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நியாயப்படுத்துகின்றார்.

பெரும்பான்மையான மக்களாக சிங்களவர்கள் இருப்பார்களாயின், அந்த இன விகிதாசாரத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறாயின், சம்பந்தனை விலக்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவராக சிங்களவரை நியமிக்கவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக சிங்களவர் இல்லாமையினால்தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர், தமிழர்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கின்றார். அவர், எல்.ரீ.ரீ.ஈயினால் துப்பாக்கிகளால் பெறமுடியாதவற்றை, நல்லிணக்கம் என்ற அரசாங்கத்தின் போர்வைக்குள் மறைந்துகொண்டு பெறமுயல்கிறார்.
முதுகெலும்புள்ள சிங்களப் படையினரும் சிங்களவர்களும் உள்ளனர் என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கும், வடமாகாண முதலமைச்சருக்கு நாம் எடுத்தியம்பவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்க முடியாது' என்று அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

'வடக்கு, கிழக்குக்குச் சென்று நெற்றியில் பொட்டு வைத்து, திலகமிட்டுவந்தால், நல்லிணக்கம் ஏற்படாது. புலிப் பயங்கரவாத, பிரிவினைவாத சிந்தனை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களிடம், அச்சிந்தனையை இல்லாமல் செய்யவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறவிட்ட ஓரிடம் இருக்கின்றது. புலிப்பயங்கரவாதிகளைத் துப்பாக்கிகளால் தோற்கடித்தவர் அவர். எனினும், புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் தடைசெய்யவில்லை. அவ்வாறு அன்று செய்திருந்தால், நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை இன்று ஏற்பட்டிருக்காது.

தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய வரப்பிரசாதங்களை வென்றெடுத்தால் பரவாயில்லை. ஆனால், புலிகள் அமைப்பின் சிந்தனையை விதைக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக, எவ்வாறான நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் எடுக்கப்போகின்றது என்பதனை, தென்னிலங்கை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதனை நினைவுபடுத்துகின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X