Editorial / 2026 மார்ச் 08 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். ஆர். லெம்பேட்
மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் அதிகார சபையின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் பயணித்து மன்னாரை வந்தடைந்த இரு பெண்கள், அதிகாலையில் தலைமன்னார் நோக்கிச் செல்வதற்காக அங்கிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் ஏற முற்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் முன்னதாகத் தனியார் பேருந்தில் பயணித்து வந்ததைக் காரணம் காட்டி, குறித்த காப்பாளர் பெண்கள் இருவரையும் இ.போ.ச. பேருந்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்தச் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எமது அதிகார சபையால் இலங்கை போக்குவரத்துச் சபையின் (வடக்கு) மன்னார் சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
"இந்த ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தாம் விரும்பும் போக்குவரத்துச் சேவையைத் தெரிவுசெய்து பயணம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதிலும் குறிப்பாக, அதிகாலை வேளைகளில் தொழில் நிமித்தமாகப் பயணம் செய்யும் பெண்கள், பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் பயணிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமையாகும்" எனத் தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
எமது பணிப்புரைக்கமைவாக, உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொண்ட மன்னார் சாலை முகாமையாளர், குறித்த இ.போ.ச. காப்பாளருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவருக்கு ஒரு நாள் ஊதியத்தைத் (வேதனம்) தண்டப்பணமாகவும் அறவிட்டுள்ளார் என்ற தகவல் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் உரிமைகளை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை அதிகாரிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட இலக்கம்
இனிவரும் காலங்களிலும் பயணிகளிடம், குறிப்பாகப் பெண்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் பொதுமக்கள் எமது அதிகார சபைக்குத் தயக்கமின்றி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.
அதற்காக விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தகுந்த ஆதாரங்களுடன் உங்களின் முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம். பொதுமக்களின் முறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த அதிகார சபை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்று தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago