2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

பேருக்கு ஐடி வேலை: இலங்கை வரை கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா கைது

Editorial   / 2026 ஜனவரி 02 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் முழுவதும் உயர் ரக கஞ்சா விற்பனை செய்ததாக பெண் தாதா ஒருவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார். மென்பொருள் பொறியாளரான இவருடன் சேர்த்து 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயர்தர 'ஷீலாவதி' ரக கஞ்சாவை நர்சிபட்டினத்திலிருந்து தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆந்திரா - ஒடிசா எல்லையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் விஜயநகரம் மாவட்டம், சாந்தகவிதியைச் சேர்ந்த 28 வயதான காடே ரேணுகா ஆவார். இவர் பாயக்காராவ்பேட்டா, நர்சிபட்டினம், சலூரு, பெங்களூர் எனப் பல இடங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதோடு, 'லேடி டான் (பெண் தாதா)' என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.

ரேணுகாவும் அவரது கூட்டாளியான சூர்யா காளிதாஸும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி, தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்புவதற்காக நர்சிபட்டினத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், இன்ஸ்பெக்டர் ஒய். தாரகேஸ்வர ராவ் மற்றும் நதாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஸ்ருகாவரம் கிராமம் அருகே அந்தக் கும்பலை மடக்கிப் பிடித்து கஞ்சா மற்றும் பிற பொருட்களைக் கைப்பற்றினர்.

இதில் 74 கிலோ காய்ந்த கஞ்சா, ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் வெளியான தகவல்களின்படி, கடத்தல் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ரேணுகா பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்க்கையே உருவாக்கியுள்ளார். இடைத்தரகர் அத்துரி பிரசாத்தின் உதவியுடன், ஒடிசாவின் பாலிமேலா மற்றும் சித்ரகோண்டா பழங்குடியினரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை  5,000க்கு வாங்கியதும் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர்களான மதன் குமார் மற்றும் நாக முத்து, வழக்கமாக இந்தக் கஞ்சா பொட்டலங்களை ராஜநகரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்புக்குக் கொண்டு செல்வராம். அங்கிருந்து அவை தமிழ்நாடு மற்றும் இலங்கைக்குக் கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், ரேணுகாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள கடத்தல்காரர்களுடன் இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி, இலங்கைக்கு கஞ்சாவைக் கொண்டு சென்று சிறிய பொட்டலங்களாகவும் விற்றுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மூன்று போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகளை மகாராஷ்டிரா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிரடி சோதனையில், ரூ.55.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், கடந்த 22ஆம் திகதி மும்பையில் அப்துல்லா காதர் என்ற போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டதில் பின்னணி தொடங்கியது. அவரிடமிருந்து ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதலானது; அவர் பெலகாவியிலிருந்து பொருட்களை வாங்கியதாகவும் ஒப்புக்கொண்டார்.
 
இந்த தகவல்களை மும்பை போலீசார் மகாராஷ்டிரா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தெரிவித்தனர். அதன்படி, பெலகாவியில் சோதனை நடத்தி, பிரசாந்த் யல்லப்பா பாட்டீல் கைது செய்யப்பட்டார். பாட்டீல், பெங்களூரில் மூன்று தொழிற்சாலைகளை இயக்கி, போதைப்பொருட்களைப் பெற்று மும்பைக்குக் கடத்தி விற்றதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, கடந்த 26ஆம் திகதியும், அடுத்தடுத்த நாட்களிலும் மகாராஷ்டிரா பொலிஸார் பெங்களூரில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் சோதனை நடத்தினர். இச்சோதனையில், 4 கிலோ 100 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், அதைத் தயாரிக்கப் பயன்பட்ட 17 கிலோ ரசாயனம் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.55.88 கோடி; மேலும், தொழிற்சாலைகளும் சீல் வைக்கப்பட்டன.

கர்நாடகத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதியளித்து வரும் நிலையில், தலைநகர் பெங்களூரிலேயே மூன்று தொழிற்சாலைகள் செயல்பட்டது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரிலும் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலையை மும்பை பொலிஸார் கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. "மகாராஷ்டிரா பொலிஸார் பெங்களூரில் தொழிற்சாலைகளைக் கண்டுபிடிக்கும்போது, கர்நாடக பொலிஸார்  என்ன செய்கிறார்கள்?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், "பெங்களூரில் ரூ.55.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக, மகாராஷ்டிரா பொலிஸார் கூறுவது, உண்மை அல்ல. அவர்கள் பறிமுதல் செய்தது, ரூ. 1.20 கோடி மதிப்பிலான, போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனங்கள் தான். அவற்றில் இருந்து, இன்னும் போதைப்பொருட்கள் தயாரிக்கப்படவில்லை," என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X