2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

“பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை”

Editorial   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மக்கள் சீனக் குடியரசின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஒக்டோபர் 13 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தேசிய மாநாட்டு மையத்திற்கு வருகை தந்த பிரதமரை, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி. பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உரை உட்பட, அரச மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தமது உரைகளை முன்வைத்தனர். 

மன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 1995 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலக மாநாட்டினதும், பாலின சமத்துவத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகிய பீஜிங் செயல்பாட்டுத் தளத்தினதும் மரபை நினைவுகூர்ந்ததோடு, கடந்த மூன்று தசாப்தங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பெண் எழுத்தறிவு அதிகரிப்பு, தாய்மாரின் இறப்பு வீதம் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்திருப்பது, மற்றும் ஆயுட்கால அதிகரிப்பு (1995 இல் 69 வயதாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 76 வயது வரை அதிகரித்திருக்கின்றது) ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.அதே நேரத்தில், தொடர்ந்தும் காணப்படுகின்ற இடைவெளிகள் குறித்தும் அவர் கவனத்தைச் செலுத்தினார். ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைவான தொழிலாளர் பங்கேற்பு (48.7% - 73%). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறைந்த பிரதிநிதித்துவம் (பட்டதாரிகளில் சுமார் 35%).

பெண்களை விகிதாசார ரீதியில் அதிகமாகப் பாதிக்கும் தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பின்மை (ஆண்களை விட 47.8 மில்லியன் அதிகமான பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்).

மற்றும் அரசியல் சமத்துவத்தை நோக்கிய மெதுவான முன்னேற்றம் ஆகிய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, பெண்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல்முறையாகும், ஆகையினால் இதற்கு நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது எனப் பிரதமர் தெரிவித்தார்.

தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை இயற்றுதலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், ஒவ்வொரு மட்டத்திலும் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், CEDAW (பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு) மற்றும் UNSCR 1325 (ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325) இணங்க பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசியக் கொள்கை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசியச் செயல் திட்டத்தை (2023–2027) செயல்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் தேசிய உறுதிப்பாடுகளைப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், உழைக்கும் வர்க்கம் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் உட்பட, பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

ஆரம்ப விழாவை அடுத்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ விருந்துபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X