2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பஸ் கட்டணத்தை இனி அதிகரித்தால் ‘மக்களால் தாங்க முடியாது’

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த முறை எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் போது, பஸ் பயணக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமில்லை எனத் தெரிவித்துள்ள, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,

பஸ் கட்டணங்கள், உச்சநிலையை அடைந்துள்ளமையே அதற்குக் காரணமெனக் குறிப்பிட்டார். 

ஊடகச் சந்திப்பொன்றில் நேற்று (27) கருத்துத் தெரிவித்த அவர், அண்மைக்கால எரிபொருள் விலை அதிகரிப்புகளின் போது, பல தடவைகள் பஸ் கட்டணங்களை அதிகரித்தமையைச் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய அமெரிக்க டொலர், தொடர்ந்தும் பெறுமதியில் உயர்ந்துவரும் நிலையில், அடுத்த முறை எரிபொருளின் விலைகள் மீளாய்வு செய்யப்படும் போது, எரிபொருள் விலை அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

“அண்மைய எரிபொருள் விலை மீளாய்வைத் தொடர்ந்து, பஸ்களில் பயணஞ்செய்வதற்கான குறைந்தபட்சக் கட்டணம், 15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

“அண்மைய பஸ் கட்டண உயர்வுகளையே மக்களால் தாங்க முடியாது. இதற்கு மேலும், பஸ் பயணக் கட்டங்களை உயர்த்த முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். 

பஸ் கட்டணங்கள் அடுத்த மாதம் உயர்த்தப்படுமாக இருந்தால், பஸ்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்ப்பரெனவும், வேறு வழிகளை அவர் தேடிச் செய்வரெனவும் தெரிவித்த அவர், தற்போது கூட, பஸ்களைத் தவிர்க்கும் மக்கள், தமது சொந்த வாகனங்களில் செல்கின்றனர் எனவும் தெரிவித்தார். 

“2008ஆம் ஆண்டில், 68 சதவீதமான பயணிகள், பஸ்களைப் பயன்படுத்தினர். 2018ஆம் ஆண்டில், அது 20 சதவீதமாகக் குறைந்தது. 2020ஆம் ஆண்டில் அது, 9 சதவீதமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். 

தனியார் பஸ் சேவைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால், 2020ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடையும் போது, பஸ் சேவைகளும் முடிவடைந்துவிடும் என, அவர் இதன்போது எச்சரித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X