Freelancer / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போவில் இருந்து கிராம மற்றும் தோட்டப் புற மக்களின் பிரயாண வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பல பஸ் சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளர் ஆர். சலோபராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர் பஸ் திருத்தத்திற்கு உரிய உதிரிப் பாகங்கள் இன்மையால் பதுளை டிப்போ நிர்வாகத்தினரால் இவ்வாறு பொது போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் பலத்த அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
பதுளை - பசறை வீதி 7 ஆம் கட்டையூடாக யூரி, மாப்பாகலை தோட்டத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு தொடர் போக்குவரத்து இடம்பெற்றிருந்தது.
இச் சேவையின் மூலம் மாப்பாகலை, வெலிபிஸ்ஸ மேற்பிரிவு, மத்தியப் பிரிவு ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களும், பசறை வீதி 2ஆம் கட்டையில் அமைந்துள்ள பாரதி தமிழ் மகா வித்தியாலயம், உடவல சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களும் பதுளையில் தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் பயனடைந்து வந்தனர்.
இப் பஸ் சேவை கடந்த 6 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் தமது பிரயாணத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் கடும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பஸ் சேவையை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பதுளை டிப்போவின் தலைவர் மற்றும் முகாமையாளரிடம் பொதுமக்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய சந்தர்ப்பங்களில் பழுந்தடைந்த பேரூந்துகளை திருத்தி சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களுக்கும் பட்டறிகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவை இன்னும் இலங்கை போக்குவரத்து சபையின் மஹரகம பிரதான காரியாலயத்தில் இருந்து அனுப்பப்படவில்லை எனவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தும் நீடிப்பதால் இ.போ.சபையின் பதுளை டிப்போவால் கிராமப் புற மக்களின் பிரயாணத் தேவையை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பல பஸ் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, இவ்விடயத்தில் தங்களது மேலான கவனத்தை செலுத்தி பதுளை டிப்போவின் பயன்பாட்டிற்குத் தேவையான உதிரிப் பாகங்கள், பட்டறிகளை விநியோகிக்க ஆவண செய்வதோடு, பழுதடைந்துள்ள பஸ்கள் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக் கடிதத்தின் பிரதிகள் பதுளை டிப்போவின் தலைவர் மற்றும் முகாமையாருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago