2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொலிஸ் தலையீடா? சுமந்திரன் எம்.பி விளக்கம்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட பொலிஸ் பிரிவொன்றில் செயற்பாடுகளில் தலையிடப்பட்டது என வெளியான செய்தி தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த பத்திரிகைச் செய்தியின் உள்ளடக்கங்களை அவர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ் மிரருக்கு நேற்று (06) கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தானே என ஏற்றுக்கொண்ட போதிலும், அச்செய்தியின் ஏனைய உள்ளக்கடங்களை மறுத்தார். 

இது தொடர்பாக அவர் தெரிவிக்கும் போது, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்கு, கடந்த 4ஆம் திகதி, பிரதம விருந்தினராக, தான் செல்லவிருந்தாரெனவும், அதற்கு முதல் நாள் இரவு, அப்பகுதியில், சந்தேகத்துக்கிடமான விதத்தில் வானொன்று திரிந்ததெனவும், அதைத் தனது ஆதரவாளர்கள் கண்டனர் எனவும் தெரிவித்தார். 

இதே பகுதியில் தான், சுமந்திரன் எம்.பி மீதான கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதெனப் பொலிஸார் 2017ஆம் ஆண்டு கண்டுபிடித்திருந்த நிலையில், குறித்த வான் தொடர்பாகச் சந்தேகமடைந்த ஆதரவாளர்கள், அதை நிறுத்தி, அதில் சென்றவர்கள் தொடர்பாகக் கேட்டுள்ளனர். 

சிவில் உடையில் காணப்பட்ட குறித்த தரப்பினர், தாம் பொலிஸார் எனத் தெரிவித்துள்ளனர். அதற்குரிய அடையாள அட்டைகளைக் காண்பிக்குமாறு கோரிய போது, அடையாள அட்டையைக் காண்பிக்காத குறித்த தரப்பினர், கைத்துப்பாக்கியை எடுத்துக் காண்பித்துள்ளனர் என, சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். 

எனவே, அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே, அவர்களைப் பிடிக்க முயன்றதாகவும், அவர்கள் தப்பிச் செல்ல, மோட்டார் சைக்கிள்களில் அவ்வானைப் பின்தொடர்ந்து சென்றதோடு, அது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள இராணுவத்துக்கு அறிவிக்க, குறித்த வானை அவர்கள் தடுத்து நிறுத்தினரென்றும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, குறித்த வானில் வந்தோர், பொலிஸாரே என, இராணுவத்தினர் உறுதிப்படுத்தினர் எனத் தெரிவித்தார். அப்பகுதியில், கஞ்சா கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவரின் கீழ் செயற்படும், விசேட பிரிவினரே இவர்கள் என வெளிப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, அவ்வானில் சென்ற பொலிஸார், அருகிலுள்ள பொலிஸ் காவலரணொன்றில் கையளிக்கப்பட, தம்மைத் துரத்திய த.தே.கூவின் ஆதரவாளர்கள், தம்மைத் தாக்கினர் எனவும், அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென்றும், பொலிஸார் கோரியுள்ளனர். இதையடுத்து, தமது ஆதரவாளர்கள் 4 பேர், பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். 

இது தொடர்பான தகவல், தனது வாகன ஓட்டுநர் மூலமாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, அதைத் தொடர்ந்து, குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும், அவ்விடயம் தொடர்பாக அறிந்திருந்த அவர், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கினாரெனவும் தெரிவித்தார். அதன் பின்னரே, தமது ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட்டனர் எனத் தெரிவித்தார்.  இதேவேளை, சுமந்திரன் எம்.பி தெரிவித்த கருத்துகள் தொடர்பில், பளையைச் சேர்ந்த பொலிஸ் தரப்புகளிடம் விசாரித்த போது, அத்தரப்புகளும் இத்தகவல்களை உறுதிப்படுத்தின.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .