2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மின்தடை விவகாரம்: மூதாட்டி பலி; வீடு தீக்கிரை

Thipaan   / 2016 மார்ச் 14 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், காமினி பண்டார

ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சுமார் ஆறு மணித்தியாலம் மின்விநியோகம் தடைப்பட்டிருந்தமையால், மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததுடன் சில அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன.

களுத்துறை , மட்டக்களப்பு, ஆகிய பிரதேசங்களில் அசம்பாவிதச் சம்பவங்களும் மஸ்கெலியா பிரதேசத்தில் யாத்திரிகர்கள் அவஸ்தைக்கு உள்ளான சம்பவமும் பதிவாகியுள்ளன. 

பாணந்துறை, கெசல்வத்தையில் 93 வயதான மூதாட்டியொருவர் பலியாகியுள்ளார். மின்சாரம் தடைப்பட்டமையடுத்து அவர், தேங்காய் எண்ணெய் விளக்கில், மண்ணெண்ணையைத் தவறுதலாக ஊற்றிப் பற்றவைத்துள்ளார்.

இதன்போது மண்ணெண்ணை ஊற்றப்பட்ட விளக்கு, குப்பென்று எரிந்தமையால் மூதாட்டி அணிந்திருந்த ஆடைகள் தீப்பற்றிக்கொண்டன.

இதனையடுத்தே அவர், கடும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியிலுள்ள வீடொன்று, ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்துள்ளது. மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் வீட்டினுள் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துவிட்டு, அவ்வீட்டிலுள்ளவர்கள் வீட்டு முற்றத்தில் இருந்துள்ளனர்.

இதன்போது, மெழுகுவர்த்தி சரிந்து விழுந்தமையால் வீடு தீப்பற்றிக்கொண்டது.

இதேவேளை, சிவனொளிபாதமலைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று யாத்திரை சென்றிருந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள், மின்சாரம் தடைப்பட்டமையால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்தனர்.

இதேவேளை, நாட்டிலுள்ள, இலங்கை மின்சார சபையின் அனைத்து மின் கட்டமைப்புக்களிலும் இராணுவத்தினரை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக் கூடிய சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின் செயலிழப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இதுதொடர்பாக அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வதற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட குழுவொன்றினை நியமித்துள்ளார். இக்குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சுசில் பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பிரதியமைச்சர்களான எரான் விக்கிரமரத்ன, அஜித் பி பெரேரா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். இக்குழுவினருடைய முதலாவது அறிக்கை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த மின் செயலிழப்புக்கு அரசாங்கத்தின் சார்பில், அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X