2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் பிரச்சினை: கலைஞர் கண்டனம்

George   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'வந்தாரை வாழவைக்கும்  தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், இன்னும் எத்தனை காலம்  தான் இலங்கைக் கடற்படையினரைக் கண்டு அஞ்சி அஞ்சி சாக வேண்டுமோ?  தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதும், அச்சுறுத்துவதும், கைது செய்வதும் என்ற மனிதாபிமானமற்ற  நடவடிக்கை தொடர் கதையாகவே நீண்டு வருகிறது.  

இதுபற்றி,  நமது மீனவர்கள் கைது செய்யப்படுவது தான் தாமதம், அடுத்த நாளே  பிரதமருக்கு நமது முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியதாக செய்தி கொடுத்து விடுவார்கள். ஆனால், கடிதத்தால் மீனவர்களின்  துயரம் களையப்படுகிறதா என்ன? மத்திய அரசுக்கோ, பிரதமருக்கோ  வெறும் கடிதம் மாத்திரம் இவ்வாறு எழுதி விட்டால் போதுமா? 

முதல் அமைச்சரோ,  மூத்த அமைச்சர்களோ, துறையின் அமைச்சரோ,  டெல்லி சென்று இது பற்றி முறையிட வேண்டாமா? 37 எம்.பி.க்கள் இருப்பதால், அ.தி.மு.க. வின் உதவி பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படும்  நிலையில்,  மீனவர் நலனுக்காக, அரசியல் ரீதியாக  அழுத்தம் கொடுக்க வேண்டியது தானே?  வெறும் கடிதத்தின் மூலமாக தமிழ் நாட்டு மீனவர்களை தமிழக அதிமுக அரசு எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? 

மனம் இருந்தால் மார்க்கம்  உண்டல்லவா?     கூட்டம் நடத்துகிறோம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றெல்லாம்  சொல்லிக் கொண்டே பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், மீனவர் வாழ்க்கை என்ன ஆவது?   

தமிழக மீனவர்கள்  28 பேரை நான்கு படகுகளோடு  இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.  கடந்த 12ஆம் திதகி 23 மீனவர்கள் இதே இலங்கைக் கடற் படையினரால்  கைது செய்யப்பட்டார்கள்.  இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டாமா? 
மத்திய அரசு  இனியும் இதுவரை தாமதித்து வந்ததைப் போல, தாமதிக்காமல் உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு  காண உளப் பூர்வமமாக  உண்மையான முயற்சி எடுக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.' என தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X