2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மத, கலாசார பிரச்சினைகளைத் தீர்க்க 'ஆலோசனை சபை'

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாசார மற்றும் மத ரீதியாக உருவாகும் பிரச்சினைகளின்போது அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை (25) அறிவித்தார்.

நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி, மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.

மதங்களுக்குகிடையிலான ஆலோசனை சபை தொடர்பான பிரேரணை, கடந்த அரசாங்க ஆட்சியின் போது கலந்துரையாடப்பட்டபோதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பேராசிரியர் வண. பெல்லன்வில விமலரத்தன நாயக்க தேரர் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக ஜனாதிபதி தைரியத்துடன் முன் நின்றமைப்பற்றி மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், அவருக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இங்கு உரையாற்றிய கொழும்பு பேராயர் கர்தினால் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இப்பிரேரணை தொடர்பாக தனது பூரண இணக்கப்பாட்டைத் தெரிவித்தார்.

பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம், இந்து ஆகிய இனங்களுக்கிடையில் காணப்படவேண்டிய மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி அனைத்து மக்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல் தனது அரசின் நோக்கமாகும் என ஜனாதிபதி, இதன்போது குறிப்பிட்டார்.

ஆயினும், தீவிரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக ஒரு சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புரிந்துணர்வுடன் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல் நம் அனைவரதும் பொறுப்பாகும் எனவும் கூறினார்.

நாட்டில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தொடர்பாக சர்வமத தலைவர்கள் புகழ்ந்து பேசியதுடன், அரசியல் ரீதியாக  கூட்டு இணக்கப்பாட்டுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்துக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையை நியமித்தல் மற்றும் அதன் கடமைப் பொறுப்புக்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து விரிவாக கலந்துரையாடி இது தொடர்பான தீர்மானத்தை அரசுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ராமன்ய பீடத்தின் மகாநாயக்கர் வண. நாப்பானே பிரேமசிறி தேரர், மல்வத்தை பீடத்தின் வண. நியங்கொட விஜித்தசிறி தேரர், அக்கமஹா பண்டிதர் வண. கொட்டுகொட தம்மாவாச தேரர், பேராசிரியர் வண. பெல்லன்வில விமலரத்தன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை மற்றும் சர்வமதத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .