2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் 11 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும்  அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்  மத போதனைக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த போதகர் மீண்டும் சுவிஸ் நாட்டிற்குச் சென்ற நிலையில் குறித்த போதகருக்கு   கொரோனா நோய்த் தொற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தேடி வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிய வந்த நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும்  தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்தும் பலர் அந்த கூட்டத்திற்கு சென்றுள்ளார்கள் என்று சுகாதார  துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்   நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  மடுக்கரை மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் 5 குடும்பங்களும் , மடுப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும்   அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்   அவர்களது வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த 11 குடும்பங்களும் அவர்களுடைய வீடுகளிலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள்  அந்த கூட்டத்தில்   கலந்து கொள்ளவில்லை  என குறித்த குடும்பந்தினர்  தெரிவித்துள்ளனர்.

எனினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த 11 குடும்பத்தினரும் அவர்களுடைய வீடுகளில் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான மருத்துவம், சுகாதாரம் , உலர் உணவு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .