2025 ஜூலை 16, புதன்கிழமை

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து 17 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் “சதொச” வளாக மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட 30 சதவீத அகழ்வுப் பணிகளின் போது, 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில், சிறுவர்கள் 17 பேரது எலும்புக்கூடுகள் அடங்குவதாகவும், அப்பகுதியில் இடம்பெற்றுவரும் அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்தார்.

குறித்த அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து, நேற்று (03) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முனைகளில், இன்னும் எலும்புக்கூடுகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் இன்னும் ஒரு மாதகாலப் பகுதியில்,  தொடர்ந்து அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், 12 மீற்றர் நீளமும் 7 மீற்றர் அகலமும் கொண்ட புதைகுழியில் மேற்கொண்டு வருகின்ற அகழ்வின் போதே, சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் கிடைத்ததாகவும்

இந்த மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக, அவற்றை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நிதி தேவைப்படுவதாகவும், இது குறித்துத் தாங்கள், சுகாதார அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறிய பேராசிரியர், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் பற்றிய தகவல்களைக் கண்டறிவதற்கான ஆய்வு நிலையம்,  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலேயே இருப்பதாகவும், அங்கு எலும்புக்கூடுகளை அனுப்புவதற்காக, முன் அனுமதியைப் பெறவேண்டி உள்ளதாகவும், மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .