2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மின் தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Freelancer   / 2021 நவம்பர் 29 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலையில் இருந்து பியகம உப மின் நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த மின் விநியோகம் சில இடங்களில் சீராகியுள்ளதாக அறியமுடிகிறது.

நாட்டின் பல இடங்களில் இன்று (29) இரவு 7.30 மணியிலிருந்து மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இலங்கை மின்சார சபையின் பராமரிப்புக் குழுவினால்,  ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடிந்துள்ளதாகவும், அடுத்த மணித்தியாலத்தில், அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கொத்மலையில் இருந்து பியகம உப மின் நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் 220 கிலோ வோற் மின்னழுத்த கேபிள்கள் இரண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக வலுச்சக்தி அபிவிருத்தி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

விநியோக கேபிள்களில் ஏற்பட்ட துண்டிப்பு காரணமாக, மகாவலி நீர் மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டு அதிர்வெண் வீழ்ச்சியை சந்தித்ததுடன், இதன்காரணமாக, சில உப மின் நிலையங்கள் செயற்பட முடியாமல் தானாக அணைந்து விட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பியகம, கொட்டுகொட, ஹபரணை, காலி, மாத்தறை, பன்னிபிட்டிய, இரத்மலானை, ஸ்ரீ ஜயவர்தனபுர, குருநாகல், கிரிபத்கும்புர, அதுருகிரிய, கொஸ்கம மற்றும் சபுகஸ்கந்த ஆகிய உப மின் நிலையங்களில் திடீர் மின் தடை ஏற்பட்டதையடுத்தே மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முழு நாடும் இருளில் மூழ்கவில்லை என்றும் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது என்றும் குறிப்பிட்ட அவர், மின்சார விநியோகத்தை மிகக் குறைந்த தாமதத்துடன் மீட்டெடுப்பதற்காக மின்சார சபையின் பராமரிப்பு சேவைகள்  இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .