2026 மே 05, செவ்வாய்க்கிழமை

முகக் கவசமணியாது எம்.பிக்கள் முட்டிமோதினர்

Nirosh   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் எழுதியிருக்கும் கடிதத்தை மீளப்பெற வேண்டுமென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், சபையில் நேற்றும் (07) சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 

ரஞ்சனின் விடுமுறை யோசனையை, அரசியலமைப்பின் 66(d) சுட்டிக்காட்டி நிராகரித்துவிட்டு, அரசியலமைப்பின் அதே பிரிவை மீண்டும் சுட்டிக்காட்டி, ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் மீது குற்றஞ்சுமத்தினார். 

அத்தோடு, ரஞ்சனின் எம்.பி பதவியைப் பறிப்பதில் சபாநாயகருக்கு ஏன் இத்தனை அவசரமெனவும் கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“ரஞ்சனின் எம்.பி பதவி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு எதிராக, உயர்நீதிமன்றில் அவரால் வழக்குத் தாக்கல் செய்ய  முடியும். அதுவரையில், ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க வேண்டாம்” எனவும், இதன்போது அவர் வலியுறுத்தினார். 

இதன்போது, உயர்நீதிமன்றத்துக்குச் செல்வது ரஞ்சனின் சொந்தச் செயற்பாடெனத் தெரிவித்த சபாநாயகர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அவர் நடவடிக்கை எடுக்க முடியுமென்றார். 

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் சபாநாயகர் எடுத்திருந்த தீர்மானத்தை சபைக்கு அறிவிக்காது, இரவோடு இரவாகத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதனை அனுப்பி, ரஞ்சனின் பதவியைப் பறித்திருப்பது தவறானச செயற்பாடெனவும், சஜித் தெரிவித்தார். 

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
ரஞ்சன் ராமநாயக்க, வெளியில் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்துக்குள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் தெரிவித்த விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு அமைவாகவே ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றார். 

இராஜாங்க அமைச்சர் நிமலன்ஷா
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவியில் ஏற்படும் வெற்றிடம் தொடர்பில் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் பெண்களின் முன் பக்கம், பின் பக்கம் தொடர்பில் பேசும் ரஞ்சனுக்காகக் குரல் கொடுக்க வேண்டாமெனவும் வலியுறுத்தினார்.

இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றுவதற்கு நளின் பண்டார எம்.பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சபையில் பதற்றம் கூடியது. தனக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கூறி நளின் பண்டார அவரது கையிலிருந்த நிலையியற் கட்டளையை (புத்தகம்) மேசை மீது அடித்து அடித்து, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதோடு, எதிர்க்கட்சி எம்.பிக்கள், சபாநாயகரின் ஆசனத்தை நோக்கிச் செல்லவும் ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஆளுங்கட்சி எம்.பிகள் ஈடுபட்டு, சபாநாயகர் ஆசத்துக்குச் செல்லும் வழியை மறைத்து நின்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதன்போது எம்.பிக்கள் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளான சமூக இடைவெளியைப் பேணவோ, முகக் கவசங்களை அணிந்தோ இருக்கவில்லை. 

துரிதமாகச் செயற்பட்ட படைக்கல சேவிதர்கள், செங்கோலையும் சபாநாயகரையும் சுற்றி நின்று பாதுகாப்பளித்தனர்.

அனைவரும் ஆசனங்களுக்குச் செல்லுமாறு எம்.பிகளுக்கு சபாநாயகர் அறிவுறுத்தியதால், சபாநாயகருக்கு அருகில் இருந்த படைக்கலச் சேவிதர்கள் எதிர்க்கட்சி எம்.பிகளை ஆசனங்களுக்குச் சென்று அமருமாறு தள்ளினர்.

எதிர்க்கட்சி எம்.பிகள், அவர்களது ஆசனங்களுக்குச் சென்ற பின்னர், நளின் பண்டார எம்.பி பேசுவதற்கு, சபாநாயகர் ஒலிவாங்கியை வழங்கினார்.

இதன்போது உரையாற்றிய நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனின் எம்.பி  பதவியைப் பறிப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் எழுதியிருக்கும் கடிதத்தை மீளப்பெற வேண்டுமெனச் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும் அதனை மறுத்த சபாநாயகர், அவ்வாறு செய்ய முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .