2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மைத்திரி, ராஜபக்‌ஷக்கள் மீதான படுகொலை முயற்சி: விசாரணைகளை மூடிமறைக்க ரணில் முயற்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ் 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழ்ச்சிகளுக்குப் பின்னால்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறாரெனவும், ஐக்கிய தேசிய கட்சியினரும் பிரதமரும் இணைந்து, இந்த விசாரணைகளை மூடிமறைக்க முயல்கின்றனர் எனவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார். 

அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, புஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில் நேற்று (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை வீட்டுக்கு அனுப்புவதற்கு, நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை எனவும், பொலிஸ்மா அதிபருக்கு எதிராகப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தாலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 எம்.பிக்கள் அணி, அதற்கு முழுமையான ஆதரவு வழங்குமெனவும், இதன்போது தெரிவித்தார். 

இதேவேளை, இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள், போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். 

புளொட், ஈரோஸ், டெலோ ஆகிய அமைப்புகளின் தலைவர்களை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படுகொலை செய்ததோடு, பொதுமக்களின் குடிநீரில் விஷம் கலந்தார் எனவும் தெரிவித்த திஸாநாயக்க எம்.பி, தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர், தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுகொடுக்க ஜனநாயக வழியில் போராடினரெனவும் தெரிவித்தார். 

தமிழ் மக்களுக்கான தீர்வுகளை, எதிர்காலத்தில் அமையவுள்ள ஆட்சியிலாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.   புதிய அரசமைப்பு என்பது, ஐக்கிய தேசிய கட்சியினரின் கபட நாடகம் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசமைப்பைக் கொண்டுவருதற்கு இடமளிக்கவில்லை என ஜனாதிபதியின் தலையில் இதனைக் கட்டிவிட்டு, பிரதமர் தப்பிப்பதற்கான திட்டமே இது எனவும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X