R.Maheshwary / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென்கிற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையைச் சபாநாயகர் நிராகரித்ததால், நேற்றைய (06) சபை அமர்வில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாகப் பாராளுமன்றத்துக்கு வரவில்லை என்றால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்படுமென அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எதிராக ரஞ்சன் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய முடியுமெனவும் கூறினார்.
வரப்பிரசாதப் பிரச்சினையை எழுப்பி தொடர்ந்தும் உரையாற்றிய சஜித், ரஞ்சன் பாராளுமன்றத்துக்கு வருவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரஞ்சனை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பில் சபாநாயகரும் இதுவரையில் எந்தவிதமானத் தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை. இதனால், ரஞ்சனால், மூன்று மாதங்களாகப் பாராளுமன்றத்துக்கு வரமுடியாதிருக்கின்றது. பாராளுமன்றச் செயலாளர் நாயகமும் சபாநாயகரும் எடுத்திருக்கும் தீர்மானமே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே ரஞ்சன் பாராளுமன்றத்துக்கு 3 மாதங்களாக வரவில்லை எனத் தெரிவித்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சபாநாயகரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமும் கடிதம் அனுப்பக் கூடாதெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
எனவே, ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவித் தொடர்பில் சபாநாயகர் ஒரு தீர்மானத்தை வழங்க வேண்டுமெனவும் சிறையில் உள்ள கைதிகளைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு தினத்திலும் பார்க்க முடியுமென்கிற நிலையில், ரஞ்சனை புதன் கிழமைகளில் மாத்திரம் பார்க்க முடியுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றமை தொடர்பிலும் சபாநாயகர் அறிவிப்பு ஒன்றை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், ரஞ்சன் விடயத்தில் தான் சட்டரீதியான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ரஞ்சனின் ரீட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கவில்லை எனவும், நீதிமன்றம் அறிவிக்கும் பட்சத்தில், தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், “மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ரஞ்சனால் முடியும். அதுவரையில் ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கு எந்தவிமான நடவடிக்கைளை மேற்கொள்ள மாட்டிர்கள்தானே?” எனவும் சபாநயாகரிடம் வினவினார்.
“பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரது உறுப்புரிமையையும் பறிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை. அது சட்டரீதியாக நடக்கும் ஒன்று.” என சபாநாயகர் பதிலளித்தார்.
எனினும், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுமுறை பிரேரணை சபையில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் அனுமதியளிக்க வேண்டுமென்ற சஜித்தின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தால், சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago