2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ராஜீவ் கொலை வழக்கு: எழுவரையும் விடுவிப்பார் ஆளுநர்?

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட எழுவரையும் விடுதலை செய்வதற்கான அங்கிகாரத்தை, தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வழங்குவார் என்ற நம்பிக்கையை, அவர்களில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் வெளிப்படுத்தியுள்ளார். 

எழுவரையும் விடுதலை செய்வதற்கான அதிகாரம், தமிழக அரசாங்கத்துக்கு உள்ளது என, இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அது தொடர்பான தீர்மானத்தை, தமிழக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தில், தமிழக ஆளுநர் கையெழுத்திட்டால், அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட முடியும். 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஆளுநர் புரோஹித்தையும், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், சந்தித்துள்ளார். இது தொடர்பாக, இந்திய ஊடகமொன்று அவரிடம் கேள்வியெழுப்பிய போதே, விடுதலை தொடர்பான தனது நம்பிக்கையை வெளியிட்டார். 

விசாரணை அதிகாரி தியாகராஜன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், சிறையில் பேரறிவாளனின் நடத்தை தொடர்பான ஆவணங்கள் உட்பட பல ஆவணங்களை, தமிழக ஆளுநரிடம் வழங்கியதாகக் குறிப்பிட்ட அற்புதம் அம்மாள், “இது இருபத்தெட்டு வருட வேதனை. நீங்கள் ஒரு கையெழுத்துப் போட்டால், எனது பிள்ளையை விடுதலை செய்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் கையெழுத்துப் போட்டு, எனது குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்” என்று, ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். அதற்கு ஆளுநர், “சரி” எனப் பதிலளித்தார் என்று, அவர் குறிப்பிட்டார். 

மகன் விடுதலை செய்யப்படுவாரா எனக் கேட்டபோது, “உச்சநீதிமன்றத்தில் தெளிவான ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால், எல்லாம் நல்லதாக நடக்கும். மனிதர்களின் நல்லெண்ணங்களைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்” என, அவர் பதிலளித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X