2025 மே 17, சனிக்கிழமை

வெளிநாடு செல்ல கே.பி.க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மால் சூரியகொட

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு நீதிமன்றம் வழங்கிய 6 மாதகால அவகாசம் போதாது என்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (31) தெரிவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், உரிய ஆதாரங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தது.

இதற்கமைய, கே.பி தொடர்பான முழுமையான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் கே.மலல்கொட, வெளிநாடு செல்வதற்காக கே.பி.க்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் அன்றைய தினம் வரை நீடித்தார்.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியினரால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சட்ட மா அதிபர் பிரியந்த நாவின்ன, மன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, 'மக்கள் விடுதலை முன்னணியின் மனு அடிப்படையில் கே.பி தொடர்பில் 193 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 193 சம்பவங்கள் தேசிய மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பில் உள்ளன. விசேடமாக ராஜீவ் காந்தி கொலை, கப்பல் கொள்வனவு, தொழிற்சாலை, நிதி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சம்பவங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன. அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க குறுகிய காலம் போதாது. அதற்கு ஆறு மாத காலம் தேவை' என பிரதி சட்ட மா அதிபர் நீதிபதியிடம் கூறியிருந்தார்.

இதற்கமைய, இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்கு, அதாவது 2015 ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வெளிநாடு செல்வதற்கு கே.பி.க்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 6 மாத காலத்துக்கு நீடித்தார்.

இந்நிலையிலேயே, இந்த வழக்கு விசாணை நேற்று மீண்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சட்ட மா அதிபர், கே.பி.க்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு நீதிமன்றம் வழங்கிய 6 மாதகால அவகாசம் போதாது என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனை கருத்திற்கொண்டே, கே.பி தொடர்பான முழுமையான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .