2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

விசேட கூட்டத்தில் பல தீர்மானம் முன் வைப்பு (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இடைநிறுத்துவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைக்கு பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (18) சனிக்கிழமை மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மணல் மாஃபியா மற்றும் அதிகாரிகளின் கூட்டு: மாவட்டத்தில் மணல் மாஃபியாக்கள் ஒருடிப்பர் மணல் விற்பனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இலாபம் ஈட்டுவதாகவும், இதற்குச் சில அரச அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் கடுமையாகச் சாடினர்.

கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட 5 அனுமதிப்பத்திரங்கள் மூலம் சுமார் 9,000 கியூப் மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மரங்களின் வேர்கள் வெளிப்படும் அளவிற்கு நிலம் சேதமடைந்துள்ளதோடு, ஆற்றங்கரைகள் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளமை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

முறைகேடுகள் தெரிந்தும் ஏன் அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யவில்லை என மாவட்டப் பொறியியலாளரை ஆளுநர் கேள்வி எழுப்பினார். மேலும், "சுற்றறிக்கைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தப்பிக்க நினைக்க வேண்டாம்" எனப் பிரதி அமைச்சர் அதிகாரிகளை எச்சரித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தைச் சீர்செய்ய பின்வரும் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன:

கடந்த காலத்தில் தன்னிச்சையாகவும் முறையற்ற விதத்திலும் அனுமதி வழங்கப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரிக்கும்.

இனிவரும் காலங்களில் அனைத்துத் திணைக்களங்களும் இணைந்து கள ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.

சி.சி.ரி.வி (CCTV) கண்காணிப்பு: மணல் கொண்டு செல்லப்படும் பிரதான வீதிகளில் உடனடியாக சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்படும்.

மணல் அகழ்வு மற்றும் சேமிப்பு உரிமம் வழங்கும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மணல் விலையைத் தீர்மானிக்க ஒரு விசேட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், மணல் முறைகேடுகளுக்குத் துணை போகும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .