2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘வடக்கு, கிழக்கை இணைக்கமாட்டேன்: சமஸ்டியை வழங்கவும் மாட்டேன்’

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி கதிரையில் ஒரு மணிநேரமேனும் தான் இருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு, தான் இந்த ஜனாதிபதி கதிரையில் இருக்கவில்லை என்றும் தெரிவித்தார். “நான், இந்தக் கதிரையில் இருக்கும் வரையிலும் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கப்போவதும் இல்லை. சமஸ்டியை வழங்கப் போவதும் இல்லை என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்விரண்டையும் அடையவேண்டுமாயின் முதலில் தன்னை கொலைச் செய்யவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று ( 31) இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். மேலே குறிப்பிட்ட இவ்விரு விடயங்களை தான் செய்தேன் என்றால், என்னை மக்கள் தூற்றுவார்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தன்னை, 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையச் செய்வதற்காக, கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைவிடவும் கடுமையான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டையும் நாட்டு மக்களையும் சிந்தித்தே இவ்வாறு கடுமையான நடவடிக்கையை தான் எடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார். “செயலாளர் ஒருவர் தன்னிடம் கடிதமொன்றை கொண்டுவந்து தந்தார். அதில், ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க வேண்டும் என்றும் மற்றும் அரசமைப்பு , அந்த உறுப்புரையின் கீழ், ஜனாதிபதியின் அதிகாரங்கள், பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கைச்சாத்திடுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க முடியும். எனினும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, ஜனாதிபதியின் அதிகாரங்களை அவருக்கு ஒப்படைக்க முடியாது” எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு பதில் கடிதமொன்றை தான் அனுப்பி வைத்ததாக தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க அவ்வாறே செயற்பாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரணிலின் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேலும் இடமளிக்கமுடியாது என்பதை அறிந்தே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகி, புதிய அரசாங்கமொன்றை நிறுவினேன் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தன்னை​கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியும் அம்பலமானது. மஹிந்த ராஜபக்ஷவும் தானும் மிகவும் அவதானமாக செயற்படவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் தங்களது விருப்பத்தை இதன்போது தெரிவித்தனர் என, அந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவைப்படும் ஒத்துழைப்பை வழங்க தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .