2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வர்த்தக அமைச்சரை சூழும் சொத்துப் பிரகடன சர்ச்சை

Simrith   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவரது பெருமளவிலான சொத்துக்கள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சமரசிங்கவுக்கு ரூ.275 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வியாபார கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் தங்கம் போன்ற பெரும் சொத்துக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளுக்கு பதிலளித்த அமைச்சர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தனது குடும்பத்திலிருந்து சில சொத்துக்களை அவர் பெற்றதாகவும், 28 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

"எனது குடும்பத்திலிருந்து பெறப்பட்ட சில சொத்துக்கள் எனக்கு உள்ளன. நான் 1997 முதல் கல்வி வகுப்புகளை நடத்தி வருகிறேன், பல்கலைக்கழகத்தில் நுழைந்த பிறகும் அதைத் தொடர்ந்தேன். 28 ஆண்டுகளுக்கு முன்பு தம்புத்தேகம நகரில் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, இப்போது அதை மூன்று மாடி கட்டிடமாக உருவாக்கி வாடகைக்கு விட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் கூறப்பட்ட தங்கம், சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் கிரிப்டோ நாணயங்களை கூட வைத்திருப்பதாக அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

"நானும் என் மனைவியும் 2006 ஆம் ஆண்டு தங்கம் வாங்கினோம், அப்போது ஒரு பவுண்ட் தங்கம் ரூ. 6,000 ஆக இருந்தது. ஐடி (தகவல் தொழிநுட்பம்) துறையில் புத்திசாலியான என் மகன் கொவிட் காலத்தில் நாங்கள் வீட்டில் இருந்தபோது ஒரு கிரிப்டோ கணக்கைத் திறந்தான்," என்று அவர் கூறினார்.

ஒரு அரசியல்வாதியாக பொதுப் பணத்திலிருந்து ஒரு சதம் கூட சம்பாதித்ததில்லை என்று அமைச்சர் கூறினார். "நான் டின் (வரி செலுத்துவதற்கான அடையாள எண்) எண்ணையும் வரிகளுக்கான கோப்பையும் வைத்திருக்கும் ஒரு நபர்," என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X