2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வல்லரசுகளின் மோதலில் சிக்க மாட்டோம்’

Freelancer   / 2022 ஜனவரி 19 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாங்கள் சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள ஓர் நாடாகும். வல்லரசுகளுக்கிடையிலான மோதல்களில் சிக்குவதற்கு எமக்கு எத்தகைய தேவையும் கிடையாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.  

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (18) காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.  

அதன்பின்னர் ஆற்றப்பட்ட அக்கிராசன உரையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை ஜனாதிபதி தெரிவித்தார்.  

அங்கு அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் பின்வருமாறு,  

உலகளாவிய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படும் பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவருக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பினை நிறைவேற்ற எம்முடன் இணைந்து செயற்படுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.    

ஈராண்டுக்குள் ஒரு குறிப்பிடத்தக்களவிலான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களுக்கு உறுதியளித்து இருந்தோம். உலகளாவிய தொற்று நோயினால் பாரிய இடையூறு ஏற்பட்டது. எனினும் எமது கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதை நாங்கள் மறக்கவும் இல்லை, தட்டிக் கழிக்கவும் இல்லை.  

கடந்த காலங்களில் எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லப்பட்ட தவறான கருத்துக்களை சீர்செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

எனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு விதத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு எமது அரசு உடந்தையாகவிருக்கவில்லை. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் அங்கீகரிப்பதும் இல்லை.  

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளோம்.  

யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

குறுகிய அரசியல் நோக்கங்கள் அடிப்படையில் மக்களை ஒருவர் மீது ஒருவரை ஏவி விடுவதை தற்போதாவது நிறுத்துமாறு, அவ்வாறான அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுகின்றோம்.  

நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் சிலருக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நான் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுத்திருந்தேன்.

நாங்கள் சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள ஓர் நாடாகும். வல்லரசுகளுக்கிடையிலான மோதல்களில் சிக்குவதற்கு எமக்கு எத்தகைய தேவையும் கிடையாது.

யுத்தத்தினால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது.

அனைத்து சமூகத்தினருக்கும் எத்தகைய பராபட்சமுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவது நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பது அரசின் கொள்கையாகும்.  

இதனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளிடம் நான் ஓர் வேண்டுகோளை விடுகின்றேன். பல்வேறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.  

இன்று மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை நாம் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். எனவே, 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே மக்களுக்காக 229 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

பசுமை விவசாயம் தொடர்பான நமது அரசாங்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, குறைபாடுகளை நிவர்த்தி செய்து இக்கொள்கைகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னோக்கி கொண்டு செல்ல நாம் எதிர்பார்க்கின்றோம்.

 கடந்த பல ஆண்டுகளாக, நாட்டின் சராசரி ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 8 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்த பற்றாக்குறை சுற்றுலாத்துறையின் வருவாய் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் என்பவற்றின் மூலம் ஈட்டப்பட்ட அந்நிய செலாவணி மூலமே ஈடுசெய்யப்பட்டது.  

இலங்கையில் தொழிற்துறைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை அதிக எரிசக்தி செலவாகும். ஆனால் எமக்கு  ஆறுகள் அருவிகள் உள்ளன, நாட்டை சுற்றிலும் கடல் உள்ளது, ஏராளமான காற்று மற்றும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி உள்ளது. இதனால்தான் எமது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.  

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 70 சதவீத எரிசக்தி தேவையை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யும் இலக்கை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.    

மக்கள் பல காலமாக எதிர்பார்த்திருந்த டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்யும் கருத்திட்ட நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. இதனை அறிமுகப்படுத்தும் ஆரம்ப கட்டத்தை இவ் ஆண்டுக்குள் நாங்கள் ஆரம்பிப்போம்.  

இந்நாடு தற்போது இந்நாட்டில் வசிக்கும் மக்களைப் போன்று எதிர்காலத்தில் வசிக்கவுள்ள மக்களுக்கும் உரித்தானதாகும். நாங்கள் இன்று செயற்படும் விதத்தில் தான் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றார்.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .