2025 மே 08, வியாழக்கிழமை

2012ஆம் ஆண்டுக்குரிய குறை நிரப்பு மதிப்பீடு சபையில் சமர்பிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 07 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிலுவைச் சம்பளக் கொடுப்பனவுகள், சுகாதாரத்துறை வைத்தியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உள்ளிட்டவை காரணமாக அதிகரிக்கப்பட்ட செலவீனங்களை ஈடு செய்வதற்கான 2012ஆம் ஆண்டுக்குரிய குறை நிரப்பு மதிப்பீட்டினை கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று செவ்வாய்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன், மத்திய அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற மேலதிக நிதியுமாகச் சேர்த்து 1,032,676 மில்லியன் ரூபாய் இதன்போது குறை நிரப்பு மதிப்பீடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்கிழமை சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர்  நஜீப் ஏ.மஜீத் 2012 ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு மதிப்பீட்டினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர்,

'பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 28/ 201 இன் படி 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 15 வீத விசேட படிக் கொடுப்பனவுகள், பொறியியலாளர்களுக்கான விசேட கொடுப்பனவுகளை ஈடு செய்ய வேண்டியுள்ளது.

அதேபோன்று, சுகாதாரத்துறை வைத்தியர்களின் அதிகரிக்கப்பட்ட அவசர அழைப்புக் கொடுப்பனவுகள், தொடர்பாடல் கொடுப்பனவுகள், மேலதிக நேரக் கொடுப்பனவுகள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் அதிகரிக்கப்பட்ட சீருடைக் கொடுப்பனவுகளால் குறை நிரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிலுவை சம்பளக் கொடுப்பனவுகள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் செயலக உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் பிரயாணக் கொடுப்பனவுகளையும் ஈடு செய்ய வேண்டும்.

அதேவேளை, சி.பி.ஜி, பி.எஸ்.டி.ஜி மற்றும் யுனிசெப் நிதிகள் - அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கிடையே மீள பகிர்ந்தளிக்கப்பட்டமை. பேரவைச் செயலக வளாக அலுவலகங்களில் ஏற்பட்ட அவசர திருத்த வேலைகளுக்கான செலவுகள் போன்றவற்றினையும் ஈடு செய்ய வேண்டியுள்ளது.

எனவே, மேற்கூறப்பட்ட காரணங்களினால் அதிகரிக்கப்பட்ட செலவீனங்களை ஈடு செய்வதற்காக, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன், மத்திய அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற மேலதிக நிதியுமாக சேர்த்து 1032,676 மில்லியன் ரூபாய் குறை நிரப்பு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட மேற்படி குறை நிரப்பு மதிப்பீட்டினை சபை ஏக மனதாக அங்கீகரித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X