2025 மே 15, வியாழக்கிழமை

கடும் மழையால் திருமலையில் இயல்பு வாழ்க்கைபாதிப்பு; பல இடங்களில் வெள்ளம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், பாலம்போட்டாறு, முள்ளிப்பொத்தானை, 96ஆவது மைல்கல், கல்மெடியாவ போன்ற பகுதிகயே இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் 2 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது.

தம்பலகாமம் - கிண்ணியா வீதி, கிண்ணியா - வான்அல வீதி என்பன போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன.  கந்தளாய் குளத்தில் 116,000 கன ஏக்கர் நீர் சேர்ந்துள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டன.
இதனால் இப்பகுதிகள் மேலும் வெள்ளத்தால் பீடிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இங்கு 3,000க்கும் அதிகமான ஏக்கர் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தால் அரைப்பகுதி மூழ்கியுள்ளது.

இதேவேளை, கந்தளாய், தம்பலகாமம், வான்அல, முள்ளிப்பொத்தானை பகுதி மக்களையும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் நிலாவெளி, கோபாலபுரம், இறக்ககண்டி, புல்மோட்டை, பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

புல்மோட்டை - ஜின்னாபுரம் வீதி பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்காக படகுகள் மூலமாக இடமாற்றப்படுகின்றனர். கடற்படையினர் போக்குவரத்து வசதிகளை படகுகள் மூலமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டிக்களி கிருஷ்ணபுரம், சுமேதகம், நித்தியபுரி, ஆனந்தபுரி, சல்லி, சாம்பல்தீவு, வரோதயநகர், கன்னியா, பீலியடி, ஆண்டான்குளம், மிகுந்தபுரம், ஜின்னாபுரம், சோலையடி கிராம சேவகர் பிரிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சாம்பல்தீவு  பாலத்தை அண்மித்த பகுதியில் நிலாவெளி வீதியில் இருந்து சாம்பல்தீவு செல்லும் வீதியில் 3 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது.
நிலாவெளி வீதியில் அலஸ்தோட்டம் பகுதியிலும் 3 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது.

ஜின்னாபுரம் பகுதியில் பண்ணை குளம் நிரம்பி வழிவதால் புல்மோட்டை 3வது மைல்கல் வீதியிலும்  வெள்ளம் பாய்கின்றது. இப்பகுதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை தோன்றி உள்ளது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மூதூர் கிழக்கு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சின்னக்குளம் நிரம்பி உள்ளது. நெய்யந்தைக்குளம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடைப்பெடுத்துள்ளது. இதனால் இப்பகுதியில் 350 ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டைபறிச்சான் பள்ளிக்குடியிருப்பு வீதியில் இறால் பாலத்திற்கு மேலாக 5அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது.  சந்தணவெட்டை   கிராமத்திற்கான போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கடற்கரைச் சேனை முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் இப்பகுதியில் தற்காலிகமாக குடியேற்றப்பட்ட குடும்பங்கள் பாதிக்ப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடற்கரைச்சேனை அ.த.க. வித்தியாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு 120 குடும்பங்கள் அகதிகளாக உள்ளனர்.  பள்ளிக்குடியிருப்பு. பட்டித்திடல், அறபாநகர், வட்டம், சாபிநகர், பெரியபாலம், இறால்குழி பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ள்ளது.

வெருகல்  பிரதேச  செயலாளர் பிரிவில் திருகோணமலை - மட்டக்களப்பு வீதி ஏ - 15 வீதியில் மாவடிச்ண்சுனை என்னும் இடத்தில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.  அங்கு வீதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. காக்காமுனை, பூநகர், சூரநகர், மாவடிச்சேனை, ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்க்பட்டுள்ளது. இங்கு வீடுகளுக்குள் வெள்ளம் புகுக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது.

இப்பகுதி எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்களது விபரங்களையும் பிரதேசங்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளில் கிராம சேவகர்களை பிரதேச செயலாளர்கள் ஈடுபடுத்தி உள்ளனர். இவர்களுடன் சமுர்த்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 850 குடும்பங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுக் கட்டிடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். திருகோணமலை இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவிலும் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .