2025 ஜூலை 02, புதன்கிழமை

தென்னமரவடி கிராம மக்கள் இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தென்னமரவடி கிராமத்து மக்கள் இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவார்களென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தென்னமரவடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக 1982ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் இந்தியாவிலும் வாழ்ந்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் தென்னமரவடி கிராம மக்கள்  விடுத்த
வேண்டுகோளுக்கமைய நேற்று சனிக்கிழமை சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.

அங்குள்ள நிலைமைகளை அவர் பார்வையிட்ட பின்னர், 452 குடும்பங்களை இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.   இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னராக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதுடன்,  அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுமெனவும்  சிவநேசத்துரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக தென்னமரவடிக் கிராமத்திற்கு திரியாயிலிருந்து செல்லும் ஒன்பதரை கிலோமீற்றர் வீதியின் திருத்தப் பணிகளை உடனே ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர், திருத்தப் பணிகளுக்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும்  தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி விக்கினேஸ்வரன், குச்சவெளி பிரதேசசபையின் தலைவர், இராணுவ அதிகாரிகள், பொறியியலாளர்கள் ஆகியோரும் தென்னமரவடிக் கிராமத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • ம. யோகன் Friday, 12 August 2011 05:01 AM

    தென்னமரவடியை பிறப்பிடமாக கொண்டநான் மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியேறுவதை இட்டு மிகவும் சந்தோசப்படுகிறேன். யோகன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .