2025 மே 08, வியாழக்கிழமை

'கிண்ணியாவிலுள்ள இராணுவத்தினரை கட்டம் கட்டமாக அகற்ற ஜனாதிபதி உறுதி'

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கிண்ணியா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை கட்டம் கட்டமாக  அகற்ற நவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை உறுதியளித்ததாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மர்ம மனிதன் விவகாரம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சுழ்நிலையின் காரணமாகவே நாட்டின் பல பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது எனவும் மர்ம மனிதன் பிரச்சினை நீங்கியவுடன் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வாபஸ் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக தௌபீக் எம்.பி குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கடற்படைத் தளங்கள் அகற்றப்படவிருந்த நிலையிலேயே கிண்ணியா கடற்படை தளம் பொதுமக்களால் தாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக சந்தித்து, கிண்ணியா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.   

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் கடந்த திங்கட்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது  இராணுவத்தின் கிழக்கு மாகாணத்திற்கான முன்னாள் கட்டளை தளபதி பொனிபெஸ் பெரேரா உள்ளிட்ட பலர் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டனர்.

இதனையடுத்தே, கிண்ணியா பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து கிண்ணியா பிரதேசத்திற்காக இராணுவத்தின் 224ஆவது படையணியும் புதிதிதாக உருவாக்கப்பட்டது.

இதேவேளை, "கிண்ணியா பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டமைக்கு அங்குள்ள மக்களே பிரதான காரணமெனவும் அவர்களின் செயற்பாடுகளினாலேயே அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது" எனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X