2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு பல்கலையின் சித்த மருத்துவ பீடத்தினை கொழும்புடன் இணக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத் துறையை கொழும்பு பல்கலைக் கழகத்துடன் இணக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கிழக்கின் சித்த மருத்துவத்துறையின் மேம்பாடுகளுக்கு உதவி மேற்கொள்ளுமாறு உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங்கும் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையுடன் இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாகாண சபை உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவரது அவசரக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை ஒதுக்கியிருக்கிறது. இப்படியிருக்க கொழும்பு  பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி, மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்விமான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம் ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட  மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல  2011ஆம் ஆண்டு  கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில்  மொத்தமாக 6 மாணவர்களே உள்ளார்கள். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்று காரணம் கூறமுடியும். கிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாகும். கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

இந்திய அரசாங்கத்தால் 100 மில்லியன் செலவில் ஆய்வுகூட உபகரண வசதிகள்  ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு நவீன  முறையில் கிழக்கின் சித்த மருத்துவத் துறையானது வளர்ச்சிபெற்று வருகிறது. இந்த நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்படுவதானது, இந்த வளங்கள் வீணாகக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் சித்த மருத்துவத்துறைக்குப் பெயர் போனது கிழக்கு மாகாணமாகும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துடன் இயங்கும் சித்த மருத்துவத் துறையினால் சித்த மருத்துவர்கள் பெருமையுடன் இருக்கிறார்கள். சித்த மருத்துவத்துறை வளர்ச்சியடை வேண்டும், முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் இந்த கொழும்பு பல்கலைக்கழகத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தை இணைக்கும் செயற்பாடுகளை தவிர்த்தல் நல்லது' என அவர் அக்கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

இதன் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X