2025 மே 03, சனிக்கிழமை

சம்பூர் இடம்பெயர் மக்களுக்கான உலர் உணவு நிவாரணத்தை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

மூதூர் கிழக்கு-சம்பூர் பிரதேசத்திலிருந்து 2006இல் இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 262 குடும்பங்களைச் சேர்ந்த 4036 பேருக்கான உலர் உணவு நிவாரணத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் 160 முன்பள்ளி மாணவர்களும் பாடசாலைகளுக்கு செல்கின்ற 918 மாணவர்களும் போஷக்க்கு இன்மையாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உலர் உணவு வழங்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாதவிடத்தில் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் அவசரமாக தலையிட்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 99 பேர் கர்ப்பிணிகள். 178 பேர் பாலூட்டும் தாய்மார்கள். 256 பேர் கணவனை இழந்த விதவைகள். தாய் மற்றும் தந்தையரை இழந்தவர்கள் 31 பேர். முன்பள்ளி செல்லும் மாணவர்கள் 160 பேர். பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 918 ஆகும்.

உலர் உணவு நிறுத்தப்பட்டதன் காரணமாக முகாம்களில் உள்ள ஆண்கள் நாளாந்தம் கூலித்தொழில் மற்றும் சில காலங்கள் சிறு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள். போதிய வருமானம் இல்லாததன் காரணமாகவும் உலர் உணவு நிவாரணம் வழங்கப்படாமையாலும் சிறார்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் போதிய போஷக்க்கின்றியும் பட்டினியாலும் துன்பப்படுகின்றனர்.

இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் காணப்படுகின்றது. அரசாங்கம் உடனடியாக தலையிட்டு உலர் உணவு நிவாரணத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையேல் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் உடனடியாகத்தலையிட்டு இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வர வேண்டும்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X