2025 மே 03, சனிக்கிழமை

முஸ்லிம் மக்களின் பங்காளியாக அரவணைத்து ஆட்சி நடத்த த.தே.கூ. தயார்: சம்பந்தன்

Super User   / 2012 ஜூலை 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன், கஜன், ரமன்)


தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் நிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்படுமானால் நியாயமான அளவிற்கு தாராளமாக முஸ்லிம் மக்களை அரவணைத்து பங்காளியாக ஆட்சி நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக திருகோணமலை சிவன் கோவில் வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை மாகாண சபை தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இதன்போது சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\

"அரசாங்கம் எல்லா விடயங்களிலும் திட்டம் ஒன்றை வைத்தே செயற்பட்டு வருகின்றது. மாகாண சபைகளுக்கு அதிகார பகிர்வு அவசியம் தேவை தானா என்பது பற்றி முழுமையாக மீள்பரிசீலனை செய்யப்படும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கின்றது.

பெரும்பான்மையின பேரினவாத சக்திகள் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது என்றும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் மாகாண சபைக்குள்ள காணி மற்றும் பொலிஸ் ஆதிகாரங்களை மீளப்பெற்று விட்டு வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழ் பேசும் மக்கள் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாஷைகளை தீர்க்க கூடிய அரசியல் தீர்வாக மாகாண சபை முறைமையை ஏற்கவில்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு தேவை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். இரு மாகாணங்களின் துண்டிப்பை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கு வரலாற்று பாரம்பரிய தாயகத்தில் தமது பிரதேசத்தை தாமே ஆள கூடியதான நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்க கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை கண்டேயாக வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற ஒரு தமிழ் வேட்பாளர் கூட வெற்றி பெறாத நிலையை தமிழ் மக்கள் ஏற்படுத்த வேண்டும். வெற்றி பெறும் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழத் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் வாக்களிப்பு தினத்தன்று உறுதி செய்ய வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலின் பின்னர் ஆளும் கட்சியினருடன் இணைய முடியாத நிலையை இது ஏற்படுத்தும். தேர்தலில் போட்டியிடுவதற்காக அளும் கட்சியுடன் சேராது தனித்து போட்டியிட்ட பின்னர் அரசுடன் இணையலாம் என்று எவராவது எண்ணினால் அது தவறான செயல் மாத்திரம் அல்ல, நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகியும் விடும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் நிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்படுமானால் நியாயமான அளவிற்கு தாராளமாக முஸ்லிம் மக்களை அரவணைத்து பங்காளியாக ஆட்சி நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது.

பேரினவாத கட்சிகளுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு நினைக்கும் எவரும் அதிகார பகிர்வில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதே அர்த்தமாகும். ஆதிகார பகிர்வு கோரிக்கையை தேர்தலில் முன்வைத்து தெரிவு செய்யப்படுபவர்கள் ஆளும் கட்சியின் அரசாங்கத்தில் இருக்க முடியாது. மத்திய அரசுடன் சேர்ந்து இருப்பின் அதிகார பகிர்வை கோர வேண்டிய அவசியமே கிடையாது.

தனித்தமிழ் ஈழத்தை இப்போது நாம் கேட்கவில்லை. தற்போது சர்வதேசமும் அதனை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிய அதிகார பகிர்வையே எமது இனம் கோருகின்றது. எமது இன போராட்டம் இலங்கையின் எல்லைகளை தாண்டி சர்வதேச சமூகத்தின் மத்தியில் சென்று விட்டது. அத்தகைய ஒரு நிலையில் தற்போதைய கிழக்கு மாகாண சபை தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இன்று வரையான 60 ஆண்டுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் எமது இனப்பிரச்சினை சர்வதேசத்தின் கண்காணிப்பை மிக வேகமாக தற்போது பெற்றுள்ளது. நடந்து முடிந்த இறுதி மோதல்களில் பல்வேறு கணிப்பீடுகள் கூறுவது போன்று பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமுற்றனர்.

பல இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர செய்யப்பட்டனர். இந்த அனர்தங்களின் மூலம் மிகவும் மோசமான வகையில் சர்வதே சட்டங்கள் மீறப்பட்டது. இவ்வாறான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இறுதி மோதல்களின் போது இருசாராரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பது நிச்சயம் ஆராயப்படல் வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளான இராணுவ பிரசன்னம் குறைக்கப்படல், அதிகபட்ச அதிகார தீர்வு மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல் என்ற விடயங்கள் இப்போது சர்வதேசத்தின் மூலம் அழுத்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு கூறப்பட்டு வருகின்றது.

அது மட்டுமன்றி இந்த சிபார்சுகளை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது பற்றிய திட்டத்தை இலங்கை அரசாங்கம் விரைவில் சர்வதேசத்திடம் முன்வைக்க வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.  இத்தகைய நிலையில் தான் தற்போதைய கிழக்கு மாகாண சபை தேர்தல் வந்துள்ளது. கிழக்கு மாகாணசபையை அவசரமாக கலைத்து விட்டு நடாத்தும் தேர்தலில் எப்படியாவது தாம் வெற்றிபெற வேண்டும்.

அப்போது சர்வதேசத்திடம் சொல்ல முடியும் தமிழர் பிரச்சனையை பற்றி நீங்கள் விடும் கோரிக்கையில் நியாயம் ஒன்றுமில்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதில் தலையிட வேண்டாம் என்று.  அத்தகைய எண்ணத்துடன் தான் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை கையாள முனைகின்றது" என்றார்.




You May Also Like

  Comments - 0

  • saleem mohideen Sunday, 29 July 2012 06:05 PM

    அப்படி ஒரு ஆட்சி அமையுமானால் அது முஸ்லிம் காங்கிரசின் அழிவின் ஆரம்பமாகும்.

    Reply : 0       0

    VEERGIN FERNANDO Monday, 30 July 2012 04:07 AM

    தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர வேண்டும்.

    Reply : 0       0

    Gowrinath.K Monday, 30 July 2012 06:01 AM

    தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வென்ற பிறகு மக்க
    ளுக்கு உதவி செய்யாவிட்டாலும் ஆறுதலாவது கூறவேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X