2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை தீர்மானங்களை வெளியிட்டார் உதுமாலெப்பை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை கூட்டம் கடந்த 17ஆம் திகதி கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட தீர்மானங்களை - கிழக்கு மாகாணசபை அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

அத்தீர்மானங்களின் விபரங்கள் வருமாறு:

1. திருகோணமலை பொது வைத்தியசாலை - மாகாண சுகாதார அமைச்சினால் இற்றைவரை நிருவகிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான திருகோணமலை நகரில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலை, திருகோணமலை மாவட்டத்தின் மக்களின் நன்மைகருதி எதிர்காலத்தில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இதன் நிருவாகத்தை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

2. கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டு, வறுமைக்கோட்டின் கீழ்வாழும் 14 கிராமங்களை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 06 கிராமங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 04 கிராமங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 04 கிராமங்களும் அடையாளம் காணப்பட்டு விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்வதென அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

3. கிழக்கு மாகாணத்தின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரின் காரியாலயத்திற்கான பிரத்தியேக ஆளணியாக மூவரை நியமனம் செய்யவும், அவருக்காக உத்தியோகபூர்வ விடுதியொன்றை ஒதுக்கீடு செய்து வழங்கவேண்டும் எனவும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

4. மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் செயினூதீன், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் தௌபீக் மற்றும் அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் டக்ளஸ் ஆகியோர்களின் சேவையை மேலும் 06 மாதகாலத்திற்கு நீடிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

5. வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச்செயலாளர் அல்ஹாஜ் எம்.ஐ.சலாவுத்தீனின் சேவையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க வேண்டுமென வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை அமைச்சர் வாரியம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

6. கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, ஆங்கில மற்றும் கணித பாடங்களிற்கான பட்டதாரி ஆசிரியர்களின் நேர்முக பரீட்சையின்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத்தவறிய காரணத்தினால் நியமனம் வழங்கப்படாத 07 ஆங்கில பாட பட்டதாரிகளினதும் ஒரு கணித பாட பட்டதாரியினதும் நியமனங்களை வழங்குவதற்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அமைச்சர் வாரியம் சிபாரிசு செய்தது.

7. கிழக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுக்களில் காணப்படும் வாகனத் தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்வதற்காக 07 புதிய வாகனங்களை கொள்வனவு செய்து அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியது.

8. அம்பாறை மாவட்டத்திலுள்ள மகாஓயா பிரதேசத்தில் காணப்படும் சுடுதண்ணீர் கிணறுகள் அமைந்துள்ள பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு கொடுப்பனவு வழங்கப்படாதுள்ள மிகுதிக் கொடுப்பனவை வழங்குமாறு வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை இக்கொடுப்பனவை 03 தவணை முறைகளில் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X