2025 மே 10, சனிக்கிழமை

மாவட்ட எல்லை மீள்நிர்ணய குழுவில் தமிழரை நியமிக்க திருமலை நகர சபை தீர்மானம்

Super User   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

2013ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற வட்டார எல்லை மீள் நிர்ணயக் குழுவில் தமிழர் ஓருவரையும் நியமிக்குமாறு திருகோணமலை நகரசபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

உள்ளுராட்சி அமைச்சரையும் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் கோரும் மேற்படி பிரேரணை, இம்மாத ஆரம்பத்தில் நகரசபை அமர்வின் போது முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இப்பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கோ.சத்தியசீலராஜா நேற்று முன்மொழிந்தார்.

இதனையடுத்து உரையாற்றிய கோ.சத்தியசீலராஜா கூறுகையில், 

"திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை மீள் நிர்ணயக் குழுவில் 4 சிங்களவர்களும் 2 முஸ்லிம்களும் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. 

இக்குழுவில் தமிழர் ஒருவரை நியமித்து தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் என்று உள்ளுராட்சி அமைச்சரையும் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் திருகோணமலை நகரசபை வேண்டுகின்றது' என்று அவர் குறிப்பிட்டார்.

சபையில் உள்ள மூன்று இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இப்பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் சத்தியசீலராஜா வேண்டுகோள் விடுத்தார். அதற்கிணங்க சபையின் முஸ்லிம் மற்றும் சிங்கள உறுப்பினர்களும் தமிழ் உறுப்பினர்களுடன் சேர்ந்து பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர்.

தீர்மானத்தின் பிரதிகளை உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உடனே அனுப்பி வைக்கும்படி நகரசபையின் தலைவர் க.செல்வராசா சபையின் செயலாளரை பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X